தமிழகத்தில், தமிழக அரசின் முயற்சியால் 1978, செப்டம்பர் 4 ந்தேதி நிறுவப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம், இரண்டாக பிரிக்கப்படவுள்ள செய்தி, பெயர் மாற்றம் என உயர்கல்வி ஸ்தாபனத்தில் நடைபெறும் மாற்று நடவடிக்கைகள் பொதுமக்கள், பேராசிரியர்கள், மாணவர்களிடையே கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்கெனவே ஏற்படுத்தியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ரூ.500 கோடியும், மாநில அரசு ரூ.500 கோடியும் பங்காக வழங்கினால், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற சிறப்பை அளிப்பதற்கு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை முன்வந்ததன் அடிப்படையில், துணை வேந்தர் சூரப்பா பிரதமருக்கு கடிதம் எழுதியதாக தெரிகிறது. ஆனால், இச்செயல் மத்திய அரசின் அதிகாரப்பரவலை மாநில அரசின் உயர்கல்வி நிறுவனத்தின் மீது திணிக்கும் செயல் மட்டுமன்றி, தமிழக அரசு கடைபிடிக்கும் 69% இட ஒதுக்கீட்டுக்கு இடையூறு விளைவிக்கும். ஏற்கெனவே தமிழக அரசு அமைத்த அமைச்சர்கள் குழு, அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்பாக அவசர அவசரமாக துணை வேந்தர் ஏன் பிரதமருக்கு கடிதம் எழுதினார்?
ஏழை, எளிய மாணவர்களின் நலனுக்காகவும், உயர்கல்வியில் மென்மேலும் உயரவும் தமிழக அரசால் நிறுவப்பட்டு, தேசிய அங்கீகாரக் குழுவிடம் 5 Star அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் நிர்வாக பொறுப்புகளை கையாளுவதற்காக ஆளுநரால் நியமிக்கப்பட்ட துணை வேந்தர், "உயர் சிறப்பு கல்வி நிறுவனம்" அந்தஸ்து வழங்குவதற்கு தேவையான நிதியை அண்ணா பல்கலைக்கழகமே வழங்கும் என்றும், மாநில அரசின் நிதியை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு நடப்பு ஆண்டு வெளியிட்ட 100 சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 18 பல்கலைக் கழகங்கள் தமிழகத்தில் இருந்து தேர்வாகி தேசிய அளவில் உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்கும் போது, அண்ணா பல்கலைக்கழகத்தை IoE (Institute of Eminence) இன் கீழ் கொண்டு சென்று தமிழக மாணவர்களின் வாய்ப்பை பறிப்பதையும், கட்டண உயர்வால் எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில அரசின் உழைப்பில் உருவான, உலகளவில் சிறப்புவாய்ந்த உயர்கல்வி அடையாளமான அண்ணா பல்கலையை ”சிறப்பு அந்தஸ்து’ பெறுவதற்காக என்று சொல்லி தன்னிச்சையாக செயல்பட்ட துணை
வேந்தருக்கு அவரின் அதிகார எல்லையை மாண்புமிகு ஆளுநர் அவர்களும், தமிழக முதலமைச்சர் அவர்களும் எடுத்துரைக்க வேண்டும். இனி வரும் காலங்களில் துணை வேந்தர் பொறுப்புக்கு தமிழகத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்தவர்களை நியமித்தால் இதுபோன்ற சூழல் உருவாவது தடுக்கப்படும். தமிழக அரசு துணை வேந்தர் சூரப்பாவிடம் உடனடியாக விசாரணை செய்து, உரிய நடவடிக்கை மூலம் ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்குமாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.