கொரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் அளிக்கப்படும். மேலும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும், கொரோனா நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும். இப்பெருந்தொற்றின் முதல் அலை மக்களை தாக்கிய நேரத்தில், கடந்த ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ் நாடு அரசிடம் 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இப்பொழுது அரசிடம் கழகத்தின் சார்பில் வழங்கப்படுகின்ற 1 கோடி ரூபாய் மற்றும் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் ஆகியவற்றோடு, ஆங்காங்கே கழக உடன்பிறப்புகள் தங்கள் பகுதிகளில் அல்லலுறும் மக்களுக்கு கொடைக்கரம் விரித்து நீட்டி நம் கொள்கை வழி நின்று மக்களின் துன்பம் துடைத்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே, ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே” என்ற புரட்சித் தலைவரின் கொள்கை வழி நின்று கழக உடன்பிறப்புகள் நிவாரணப் பணிகளில் அக்கறை கொள்ளுங்கள் என்று புரட்சித் தலைவி அம்மாவின் பெயரால் வேண்டி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர் செல்வமும் அறிவித்துள்ளார்கள்.