தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5225 இடங்கள் இருக்கின்றன. இதில் 15 விழுக்காடு அதாவது 784 இடங்கள் அனைத்திந்திய ஒதுக்கீடாகவும், மாநில அரசு ஒதுக்கீடாக 85 விழுக்காடு, அதாவது 4441 இடங்கள் எனப் பிரித்து மாணவர் சேர்க்கைகள் நடைபெறவிருக்கின்றன.
இந்த மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ்நாட்டு மாணவர்களில் பெரும்பாலானோர் அனைத்திந்திய ஒதுக்கீட்டில் தங்களுக்கான இடங்களைத் தேர்ந்தெடுப்பதில்லை, அனைத்திந்திய ஒதுக்கீடு குறித்து சரியான புரிதலும், விழிப்புணர்வும் இல்லாததே இதற்குக் காரணம். இதனால் அனைத்திந்திய ஒதுக்கீட்டில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநிலத்தவர் அதிக இடங்களில் சேர்ந்து மருத்துவ கல்வியைப் பயின்று வரும் நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் வாய்ப்பும் நழுவுகின்றது.
கடந்த ஆண்டு 784 இடங்களில் சுமார் நூறு இடங்களில் மட்டுமே தமிழக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஏறக்குறைய 675 இடங்களைப் பிற மாநிலத்தவர் சேர்ந்துள்ளனர். இதனால் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்ற, தகுதியான தமிழக மாணவர்களுக்கு மருத்துவம் பயிலும் வாய்ப்பு நழுவியுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இதுகுறித்து சரியான விழிப்புணர்வு இல்லாமையால், அதிக மதிப்பெண் பெற்றவர்கள் 85 விழுக்காடு மாநில அரசு ஒதுக்கீட்டில் இடங்களைப் பெற முயலுகின்றனர்.
மேலும் சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியன மட்டுமே சிறந்த கல்லூரி என கருதி தலைநகரை நோக்கித் தள்ளப்படும் சமூக அழுத்தத்திற்கு மருத்துவ மாணவர்கள் ஆளாகின்றனர்.
நீட் தேர்வில் 610 மதிப்பெண் பெற்ற பிற மாநிலத்து மாணவர்கள் நாகை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, அரியலூர் போன்ற மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் போது தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டும் சென்னையில் மருத்துவ கல்வியைப் பயில முயற்சிகின்றனர்.
இதனால் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த மருத்துவக்கல்லூரிகளின் சேர்க்கை இடங்களைத் தமிழ்நாட்டு மாணவர்கள் இழக்கநேரிடுகிறது.
மதுரை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, சேலம், திருநெல்வேலி, கோவை, திருச்சி, தூத்துக்குடி எனத் தமிழகத்தில் பல நகரங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் அதிகப் படுக்கைகளும், வசதிகளும் கொண்டு சிறப்பாகவே இயங்குகின்றன. அதுமட்டுமல்ல, அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் ஒன்றிய மருத்துவக் கவுன்சில் மூலம் தரக் கட்டுப்பாடு செய்யப்படுகிறது. மேலும், தமிழகத்திலுள்ள எல்லா அரசு மருத்துவக் கல்லூரிகளும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் இயங்குகின்றன.
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், நீட் அதிகளவில் மதிப்பெண்களை எடுத்த நம் மாநிலத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்களை அனைத்திந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையில் சென்னை தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மருத்துவ கல்வி பயில வேண்டும் என்ற விழிப்புணர்வு இயக்கத்தைத் முன்னின்று நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும் அதேபோன்று அகில இந்திய ஒதுக்கீட்டில் பயிலும் மருத்துவ மாணவர்களின் கல்விக் கட்டணத்தைத் தமிழ்நாடு அரசே ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு மருத்துவக்கல்விக்கான கலந்தாய்வு நடந்து வருவதால் இதற்கான முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும்.