அனைத்து உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் குடுபத்திற்கும் கொரோனா மரண இழப்பீடு வழங்க சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வேண்டுகோள்

பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்கள்  மிகுந்த நெருக்கடியான காலகட்டத்தில் கொரோனா விழிப்புணர்வுப் பணியில் இரவும் பகலுமாகப் பாடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் புதிய ஆட்சி மலர்ந்தவுடன் பதவி ஏற்பதற்கு முன்பாகவே பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்களின் உன்னதப் பணியை உணர்ந்த மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாகத் தமிழக அரசு கருதும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பு விரைவில் அரசாணையாக வெளியாகும் என்பது பத்திரிகையாளர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில்  இன்று (26-05-2021) பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை 5 ஆயிரம் ரூபாய் – கொரோனா  நோய்த்தொற்றினால் இறப்பு ஏற்படின் இழப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் என்ற முதல்வர் மு.க. ஸ்டாலினின்  ஆணைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.

அதே நேரத்தில் ஒருசில முக்கியமான, நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.

1.   பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்கள் தமிழக அரசின் அங்கீகரிப்பட்ட முனகளப் பணியாளர்கள் என்ற அரசாணை வெளியிடப்பட வேண்டும். அரசின் இழப்பீடு – ஊக்கத்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பெறுவதில் தற்போதுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் என்ற நிலையை விரிவுபடுத்தி அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் கிடைக்க உரிய பரிசீலனை செய்திட வேண்டுகிறோம்.

2.   கொரோனா  நோய்த்தொற்றினால் இறப்பு ஏற்படின் இழப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் என்ற முதல்வர் மு .க .ஸ்டாலின்  ஆணைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கும் நேரத்தில் முன்களப் பணியாளர்களாக பத்திரிகையாளர்களை அங்கீகரித்து இழப்பீட்டுத் தொகையை 25 லட்சமாக உயர்த்திடவும் மிகுந்த அன்போடு வேண்டுகிறோம். பெரும்பாலான பத்திரிகையாளார்கள் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ளனர்.

3.   கொரோனா நோய்த்தொற்றினால் மரணமடைந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு பத்திரிகையாளர் ஓய்வூதிய திட்டத்தை விரிவுபடுத்தி  பத்திரிகையாளர் நலனில் உலகத்திற்கு முன்மாதிரியாக நம் தமிழ்நாடு இருக்க உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டுகிறோம். நலிந்த பத்திரிகையாளர் குடும்பங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் ஆட்சியை வாழ்த்தும் நிலை உருவாகும்.

4.   தமிழக அரசின் செய்தித்துறையை முடுக்கிவிட்டு பத்திரிகையாளார்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்குத் தடுப்பூசி போட ஏற்பாடு செய்வது, நோய்த்தொற்றுக்கு ஆளாகும் பத்திரிகையாளர்கள் – குடும்பத்தினருக்கு உரிய சிகிச்சைக்கு உதவுதல், கொரோனா நோய்த்தொற்றினால் மரணமடைந்த பத்திரிகையாளர் விவரங்களைத் துரிதமாகச் சேகரித்து அவர்கள் குடும்பத்தினருக்கு அரசின் இழப்பீடு செய்து தருதல் ஆகிய பணிகளைச் செய்திட உரிய உத்தரவுகளைப் பிறப்பித்திடவும், இதைக் கண்காணித்துத் தாமதமில்லாமல் நடவடிக்கைகளை உறுதி செய்யவும் பொறுப்பு அதிகாரி ஒருவரை நியமித்திடத் தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பார் என்று முழுமையாக நம்புகின்றோம் – நம்பிக்கையுடன் வேண்டுகின்றோம்.

பாரதிதமிழன்,
இணைச் செயலாளர்,
சென்னை பத்திரிகையாளர் மன்றம்