தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு ஊரடங்கு நடவடிக்கைகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் சூழலில், வழிபாட்டுத் தலங்களுக்கு தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இத்தகைய பெருந்தொற்று காலத்தில் வீடுகளில் முடங்கியிருக்கும் மக்களுக்கு இறைவழிபாடு ஒன்றே மன அமைதியை தரும் செயலாக அமையும் என்பதால், அதனைக் கருத்தில் கொண்டு அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் கட்டுப்பாடுகளுடன், சமூக இடைவெளியை பின்பற்றி திறந்திட தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். மேலும், பல்வேறு அத்தியாவசிய கடைகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் டீக்கடைகள், செருப்புக் கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தெருவுக்கு தெரு அமைந்திருக்கும் டீக்கடைகளில் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் அமைந்திருக்கும் சூழலில், அவைகளுக்கு அனுமதி மறுப்பது வருமான இழப்பை ஏற்படுத்தும். ஆகவே, சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் டீக்கடைகளுக்கும் தமிழக அரசு தளர்வு அளிக்க வேண்டும். அதேபோல் அரசின் தளர்வுகளில் விடுபட்டுள்ள செருப்புக் கடைகள் இயங்கவும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.