பாஜக மத்திய அரசு அறிமுகப்படுத்திய ‘நீட்’ தேர்வு முறையால் தமிழகத்திற்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மருத்துவக் கல்வி பெறும் கனவுகளோடு இருந்த அரியலூர் அனிதா தொடங்கி 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிர் பலியானார்கள். இந்தப் பதற்ற நிலை இன்னும் தொடர்கிறது. மருத்துவக் கல்லூரிகள் அதிகம் உள்ள தமிழ்நாட்டில், மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்பைப் பாதுகாக்க வேண்டும் என போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இத்தச் சூழலில் அரசுப்பள்ளியில் மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்போருக்கு, இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்ட முன் வடிவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. அரசியலமைப்பு அதிகாரத்தின் படி, மாநில அமைச்சரவையின் ஆலோசனைகளை ஏற்க வேண்டிய கடமைப் பொறுப்பை ஆளுநர் அலட்சியம் செய்து, இன்னும் மூன்று, நான்கு வார கால அவகாசம் தேவை என கூறியிருந்தார்.
இந்த நிலையில் அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அராசணை வெளியிட்டிருப்பதும், நடப்பு ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசாணைப்படி 7.5 சதவீத இடங்கைளை அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்க வேண்டும் என அரசாணை தெளிவுபடுத்தியுள்ளது. ஆளுநர் ஒப்புதல் குறித்த சர்ச்சைக்கு மத்தியில் 7.5 இடஒதுக்கீட்டுக்கான அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டி வரவேற்கிறது. இதேபோல் மாநில அரசின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதி காட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு இரா.முத்தரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.