அரசு மருத்துவர்கள் கோரிக்கைகளை தாமதமின்றி நிறைவேற்றுக – இரா.முத்தரசன் கோரிக்கை

மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையில் மருத்துவர்கள் பெற்று வரும் ஊதிய த்தை தமிழ்நாடு அரசும் மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் நீண்ட காலமாக, தொடர்ந்து போராடி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் மருத்துவப் பணியில் சேரும் போது ஒரே அளவிலான அடிப்படை ஊதியத்தை பெறுகிறார்கள். இது பணிக்காலத்தில் தொடராமல் மாநில அரசு மருத்துவர் களுக்கு பாகுபாடு காட்டுவதால் மத்திய அரசு மருத்துவர் 13ஆம் ஆண்டு பணியில் பெறும் ஊதியத்தை மாநில அரசு மருத்துவர் 30 ஆம் ஆண்டு பணியாற்றிய பிறகே பெற முடியும் அவலநிலை தொடர்கிறது. ஒரே பணி செய்யும் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் கடுமையான வேறுபாடு நிலவுவது மருத்துவர் சமூகத் திற்கு இழைக்கப்படும் அநிதியாகும். கொரோனா நோய் தொற்றுப் பரவல் தடுப்பு மற்றும் தாக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை அளிப்பது என்பதில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் பணி தனி முத்திரை பதித்து, அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் போராடிய காலத்தில் அரசுத் தரப்பில் முதலமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோர் அளித்த உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்துவது மருத்துவர்களை மீண்டும் போராட்டக் களத்திற்கு நெட்டித் தள்ளும் நிர்பந்தச் செயலாகும். இந்தத் தவறான அணுகுமுறையை கைவிட்டு. அரசு மருத்துவர்கள் கோரிக்கைகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சரையும், அரசையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தனது அறிக்கையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.