அருண்ராஜா காமராஜ் தனது இணையற்ற ஆற்றல் காரணமாக திரையுலகிலும் இசைத் துறையிலும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்து வருகிறார். பாடலாசிரியராக இருந்து ‘கனா’ என்ற படத்தை இயக்கியதன் வாயிலாக, புதிய உயரம் தொட்டு சிறப்பான இடத்தை அடைந்திருக்கிறார். அதே சமயம் ஏ.ஆர்.கே. என்ற பெயரில் தன் சொந்த நிறுவனத்தைத் துவங்கி, பிலீவ் ஆர்டிஸ்ட் சர்வீசஸ் அண்ட் டெவலப்மெண்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து, இசை ஆல்பங்களையும் தனிப்பாடல்களையும் தொடர்ந்து வெளியிடும் திட்டத்துடன் புதியதொரு பயணத்தையும் தொடங்கியிருக்கிறார். ‘கன்னக் குழியழகே’ என்ற தனிப்பாடல், இந்த நிறுவனம் சார்பாக முதல் முறையாக வெளியிடப்பட்டிருக்கிறது. கணேசன் சேகர் இசையமைப்பில் நாட்டுப்புற மெல்லிசைப் பாடலாக உருவாக்கப்பட்டிருக்கும் இதன் டீசர் ஓரிரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டபோதே, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. விஜய் ஜேசுதாஸின் தேனிசைக் குரலுடன், தற்போது வெளியாகியிருக்கும் ‘கன்னக் குழியழகே’ லிரிக் வீடியோ நகரின் கீதமாக மாறியிருக்கிறது. ஏ.ஆர்.கே.இன்டர்நேஷனல் நிறுவனர் அருண்ராஜா காமராஜ் இது குறித்து விவரிக்கையில், “இசைத் துறையில் திறமையானவர்களைக் கொண்டு தனி இசைப்பாடல்களை உருவாக்குவதையே பிரதான நோக்கமாகக் கொண்ட ஏ.ஆர்.கே.நிறுவனத்தின் முதல் முயற்சியாக கணேசன் சேகர் இசையமைப்பில் ‘கன்னக் குழியழகே’ பாடல் வெளியாகியிருக்கிறது. முதல் பார்வையிலேயே ஒரு பெண்மீது காதல் வசப்படுவது குறித்து பாடல் ஒன்றை ஆர்வம் மிக்க பாடலாசிரியர் ஒருவர் எழுதவேண்டியிருக்கிறது. ஆனால் அவருக்கோ இதில் அனுபவமில்லை என்பதால் அந்தச் சூழலே முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது. அந்த சமயத்தில் அடுத்த பாடல் பதிவுக்காக பெண் ஒருத்தி வருகிறாள். கவர்ந்திழுக்கும் அவளது எழிலான தோற்றமும், தேவதை போல் அவள் புன்னகைப்பதும் வற்றாத வார்த்தை ஊற்றாகப் பெருக்கெடுக்க, அழகான பாடல் பிறக்கிறது. பாடலின் மந்திர வரிகளைக் கேட்ட அந்தப் பெண், இறுதியில் புன்னகைத்தவாறே பாடலாசிரிய.ருக்கு வாழ்த்து தெரிவிக்கிறாள். எழுச்சியூட்டும் ஆன்மாக்களின் புதிய பயணம் இங்கே தொடங்குகிறது. அது தொடரவும் போகிறது. பாடலை உருவாக்கியிருப்பதுடன் பாடலுக்கான விஷுவல்ஸையும் அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கிறார். லிரிக் வீடியோ பொறுப்பை ரஞ்சித் குமார் ராஜேந்திரன் கவனிக்க, ஓவியப் பொறுப்புகளை திவ்யா ஏற்றிருக்கிறார். பப்ளிசிட்டி டிசைன் பொறுப்புகளை நெக்ஸ் ஜென் நிறுவனம் ஏற்க, மோஷன் போஸ்டர் பணிகளை பாஷித் சையத் கவனித்திருக்கிறார். இந்த பிரதான கலைஞர்கள் ஒன்றிணைந்து ‘கன்னக் குழி அழகே’ என்ற இதயத்தைத் தொடும் இந்த இனிய மெல்லிசைப் பாடலை உருவாக்கியிருக்கிறார்கள்.