சென்னை, குரோம்பேட்டை, லட்சுமிபுரம், 4வது குறுக்குத் தெருவில் வசிக்கும் பால் பிரைட் என்பவரின் மகளுக்கு 27.01.2021 அன்று குரோம்பேட்டை, GST அன்னை சர்ச்சில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் GST அன்னை சர்ச்சில் இருந்து தனது குரோம்பேட்டை வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். வீட்டில் இறங்கிய போது, ஆட்டோவில் தனது மகளின் 50 சவரன் தங்க நகைகள் அடங்கிய கைப்பையை தவற விட்டு சென்றுள்ளார். இது குறித்து
பால் பிரைட் காவல் நிலையத்தில் வாய்மொழியாக அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. S-13 குரோம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்தார்கள். இந்நிலையில் தற்செயலாக புகார்தாரரான பால் பிரைட் என்பவர் தான் சவாரி செய்த ஆட்டோ வருவதை கண்டு ஆட்டோ ஓட்டுநர் சரவண குமாரை சந்தித்து தான் தவற விட்ட 50 சவரன் தங்க நகைகள் அடங்கிய கைப்பை குறித்து கேட்டுள்ளார். உடனே ஆட்டோ ஓட்டுநர் சரவணக்குமார் கைப்பையை கொடுக்கவே பால்பிரைட்-ஐ தேடி வந்ததாக தெரிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டுர் சரவணக்குமார் S-13 குரோம்பேட்டை காவல் நிலையம் வந்து 50 சவரன் தங்க நகைகள் அடங்கிய கைப்பையை ஆய்வாளர் முன்னிலையில் உரிமையாளர் பால்பிரைட் இடம் ஒப்படைத்தார்.
பயணி ஆட்டோவில் தவறவிட்ட 50 சவரன் அடங்கிய கைப்பையை நேர்மையாக உரிமையாளரிடம் ஒப்படைத்து சமுதாயத்தில் சிறந்த குடிமகனாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சரவணக்குமாரை குடும்பத்தினருடன் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால்,நேரில் அழைத்து கேடயம் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டி கௌரவித்தார்.