சென்னை, கீழ்ப்பாக்கம், வரதம்மாள் தோட்டம், 3வது தெரு,எண்.163 என்ற முகவரியில் பத்மநாபன், வ/54, த/பெ. சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாகவும் ஓய்வு நேரங்களில் வாடகை ஆட்டோ எடுத்து ஓட்டி வருகிறார். இவர் கடந்த 08.09.2019 அன்று காலை சுமார் 9.00 மணியளவில் சௌகார்பேட்டை, அருணாசலம் தெருவிலிருந்து மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகிய நான்கு நபர்களை ஆட்டோவில் சவாரி ஏற்றிக்கொண்டு சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இறக்கிவிட்டுள்ளார். மேற்படி நபர்கள் ஆட்டோவிலிருந்து இறங்கும்போது, தவறுதலாக ஒரு சூட்கேஸை ஆட்டோவில் தவறவிட்டு சென்றுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் பத்மநாபன் மதியம் தனது
ஆட்டோவின் பின் சீட்டை பார்த்த போது சீட்டிற்கு அடியில் ஒரு சூட்கேஸ் இருப்பதை கண்டு, அதனை எடுத்து நேர்மையாக தனது வீட்டின் அருகில் உள்ள ஜி-5 தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். ஜி- 5 தலைமைச்செயலக காலனி காவல் நிலைய போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்த போது அதில் வைரம் மற்றும் தங்க நகைகள், ரொக்கம் ரூ.15,000/- மற்றும் ஆதார் அடையாள அட்டை இருந்துள்ளது தெரியவந்துள்ளது. உடனே ஜி-5 தலைமைச்செயலக காலனி காவல் நிலைய போலீசார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆட்டோவில் சூட்கேஸை தவறவிட்ட பெண்ணின் சகோதரர் மோகன்லால், வ/22, த/பெ.ஜெகராம், எண்.23/26 அருணாசலம்தெரு, சௌகார்பேட்டை என்பவர் சி-2 யானைகவுனி காவல் நிலையத்தில் ஆட்டோவில் சூட்கேஸை தவறவிட்டது தொடர்பாக புகார் கொடுத்துள்ளது, ஜி-5 தலைமைச்செயலக காலனி போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் ஆட்டோவில் தவறவிட்ட சூட்கேஸ் ராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்த பெண் நித்து, வ/20, த/பெ.ஜெகராம், ஜாலூர் மாவட்டம், ராஜஸ்தான் மாநிலம் என்பவருக்கு சொந்தமானது என்பதும், சூட்கேஸை தவறவிட்ட பெண் நித்து சம்பவத்தன்றே சென்னையிலிருந்து விமானம் மூலம் பெங்களூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளதும் தெரியவந்தது. மேலும் பெங்களூரில் உள்ள நித்துவை போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் சூட்கேஸை தனது அண்ணன் மோகன்லாலிடம் ஓப்படைக்குமாறு கூறியதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை செய்து சௌகார்பேட்டையில் வசிக்கும் மோகன் லாலிடம் மேற்படி சூட்கேஸை பத்திரமாக ஒப்படைத்தனர். ஆட்டோவில் கண்டெடுத்த ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள தங்க வைர நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.15,000/- அடங்கிய சூட்கேஸை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் எஸ்.பத்மநாபனை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 13.09.2019 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.