நடிகர் தியாகராஜன் அந்தாதுன் ஹிந்தி திரைப்பட உரிமையை வாங்கியிருக்கிறார். இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைகதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்து அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன். ஏற்கெனவே, தியாகராஜன் ஸ்ரீராம் ராகவனின் ஜானி கத்தார் திரைப்படத்தை ஜானி என்ற பெயரில் பிரஷாந்த் நாயகனாக நடிக்க ரீமேக் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தியாகராஜன் பேசுகையில், ‘அந்தாதுன் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. நடிகர் பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு கைவந்த கலையாக இருக்கும்’ என்றார்.
தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றாலும் இயக்குனர், பிற நடிகர்கள், தொழிட்நுட்ப வல்லுனர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படக்குழு முடிவானவுடன் விரைவில் படப்பிடிப்பும் துவங்கவிருக்கிறது.