மருத்துவ கல்வியில், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சத ஒதுக்கீட்டை நாடு முழுவதும் வழங்கவும், தமிழ்நாடு அரசு தனது இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமலாக்க அனுமதிக்கவும் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சென்னை உயர்நீதி மன்றத்தில் கட்டளை மனு தாக்கல் செய்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தமிழ்நாடு மாநில செயலாளரான இரா.முத்தரசன், 15.06.2020 அன்று உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்ட பிறகு, 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப் பட்டிருக்க வேண்டிய 27 விழுக்காடு இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப் படவில்லை. ஆனால் 2019 ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டு வந்ததின் மூலம் நடைமுறைப் படுத்தப்படும் முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு 2020ஆம் ஆண்டு முதலேயே வழங்கப்படுகிறது. ஆனால், மாநில அரசு நிறுவனங்கள் வழங்கும் இடங்களில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு (ளிஙிசி)மட்டும் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு மறுக்கப் படுவது சமூக அநீதி ஆகும். இதுவரை இந்த சமூக பிரிவுக்கு வழங்கப் பட்டிருக்க வேண்டிய 2386 இடங்கள் மறுக்கப்பட்டுள்ளன. கட்டளை மனு வாயிலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உயர் நீதிமன்றத்தின் முன்பு வைத்துள்ள வேண்டுதல் வருமாறு:
1. அகில இந்திய அளவில் மருத்துவ கல்விக்கான இடங்களை நிரப்புவது சம்பந்தமாக, தேர்வுகளுக்கான தேசிய வாரியம் 09.05.2020 அன்று நீட் முதுநிலை தேர்வில் 2,020 இடங்களுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணங்களை ஆணையிட்டுத் தருவித்து, அந்த முடிவை ரத்து செய்து உத்திரவிட வேண்டும். 2. தமிழ்நாட்டில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் இளநிலை முதுநிலை மற்றும் பட்டயப் படிப்புகளில், அகில இந்திய கோட்டா முறைக்காக, (மத்திய அரசின் மருத்துவ கல்வி நிறுவனங்கள் தவிர்த்து) மாநில அரசு ஒப்படைத்த (சரண்டர் செய்த) மருத்துவக்கல்வி இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட சமூகங் களுக்கு 50% ஒதுக்கீட்டை 2020-2021 கல்வியாண்டில் அமலாக்க உத்தரவிட வேண்டும். மேலும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு தமிழ்நாடு சட்டம் 1994படி ஒதுக்கீடு வழங்குவதை தொடர்ந்து அமுலாக்க உத்தரவிட வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் நேரத்தில், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்காமல், 09.05.2020 ல் வெளியிடப்பட்டுள்ள நீட் முதுநிலைத் தேர்வில் 2,020 இடங்களுக்கான முடிவுகளின் அடிப்படையில் அகில இந்திய கவுன்சிலிங்கை எந்த வகையிலும் தமிழ்நாட்டில் துவங்க கூடாது என இடைக் காலத் தடை விதிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தாக்கல் செய்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் சூழலையும் உண்மைகளையும் கருத்திற்கொண்டு இதற்கு பொருத்த மான யாதொரு உத்தரவையும் உச்சநீதிமன்றம் வெளியிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டுகிறோம் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.