கொரோனா வைரஸ் காரணமாக 2021-ம் ஆண்டுக்குள் உலகளவில் 15 கோடி மக்கள் மோசமான வறுமையில் சிக்குவார்கள் என்று உலக வங்கி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்குப்பின் உலக நாடுகள் புதிய பொருளாதாரத்துக்கு தங்களை தயார்படுத்த வேண்டும், அதாவது, புதிய வர்த்தகம், துறைகளில் முதலீடுகள், தொழிலாளர்கள், திறன்கள், கண்டுபிடிப்புகளை அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. உலகளவில் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், இந்த ஆண்டுக்குள் 11.5 கோடி மக்கள் வறுமையில் சிக்குவார்கள் என கணித்திருந்தநிலையில் ஒட்டுமொத்தமாக 2021-ம் ஆண்டுக்குள் 15 கோடி மக்கள் மோசமான வறுமையின் பிடியில் வீழ்வார்கள். இருபது ஆண்டு வறுமை என்ற தலைப்பில் உலக வங்கி அறிக்கை வெளியிட்டது. அதில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மால்பாஸ் கூறியதாவது:
“கொரோனா வைரஸ் பெருந்தொற்றாலும், உலகளவில் பொருளாதாரச் சரிவாலும், உலக மக்கள் தொகையில் 1.4 சதவீதம் பேர் மிகமோசமான வறுமையில் சி்க்குவார்கள். 2020-ம் ஆண்டில் உலகின் வறுமை வீதம் 7.9 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது அதிகரிக்கும். இந்த வளர்ச்சிப்பின்னடைவு மற்றும் வறுமை நிலையைக் குறைக்க, ஒவ்வொரு நாடும் கரோனாவுக்கு பின், வித்தியாசமான பொருளாதார அணுகுமுறையைக் கையாள வேண்டும். புதிய துறைகளுக்கு அனுமதி, வர்த்தகத்துக்கு அனுமதி, முதலீடு, தொழிலாளர், திறன் ஆகியவற்றுக்கு அனுமதி தர வேண்டும். புதிதாக வறுமையில் பாதிக்கப்படக்கூடியவர்கள் அனைவரும் ஏற்கெனவே அதிகமான வறுமை இருக்கும் நாடுககளைச் சேர்ந்தவர்களாக தான் பெரும்பாலும் இருப்பார்கள். நடுத்தர வருமானத்தைக் கொண்டிருக்கும் நாடுகளில் உள்ள மக்கள் இன்னும் மோசமான வறுமைக்குள் தள்ளப்படுவார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை இந்தியாவில் வறுமை குறித்த புள்ளிவிவரங்கள் முழுமையாக இல்லை என்பதால், உலகளாவிய வறுமையைக் கணக்கிடுவதில் சிக்கல் எழுகிறது. கடுமையான வறுமையில் உள்ள மிகப்பெரிய மக்களைக் கொண்ட இந்தியாவிடம் சமீபத்திய வறுமை குறித்த எந்தத் தகவலும் இல்லை. இதனால் உலகளாவிய வறுமையின் தற்போதைய மதிப்பீடுகளை மதிப்பீடு செய்வதில் நிச்சயமற்ற தன்மையை உண்டாகுகிறது. இவ்வாறு மால்பாஸ் தெரிவித்தார்