இந்தியாவிலிருந்து சர்வதேசப் பயணிகள் விமானப் போக்குவரத்துச் சேவை ரத்து, செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. அதேசமயம், குறிப்பிட்ட வழித் தடங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடியவகையில் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது சர்வதேச விமானப் போக்குவரத்தை கடந்த மார்ச் 22-ம் தேதி மத்திய அரசு நிறுத்தியது. அதன்பின் சர்வதேச அளவில் வர்த்தக ரீதி யான பயணிகள் விமானப் போக்குவரத்தை அரசு தொடங்க அனுமதிக்கவில்லை. அதேசமயம், வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்கும் பொருட்டு, வந்தே பாரத் மிஷன் திட்டத் தை மத்திய அரசு கடந்த மே 7-ம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது. இதுவரை 5 கட்ட வந்தே பாரத் மிஷன் முடிந்துள்ளது. 10 லட்சம் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை வெளிநாடுகளில் இருந்து அழைத்து வந்துள்ளது. மற்ற நிறுவன விமானங்கள் மூலம் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் இன்னும் குறையவில்லை. தற்போது இந்தியாவில் 37 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் 70 ஆயிரத்துக்கும் அதிகமா னோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 63 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த நேரத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்குவது ஏதுவானதாக இருக்காது என்பதால், சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து செய்யும் உத்தரவை செப் 30-ம் தேதி வரை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நீட்டித்துள்ளது. இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில், “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இந்தியாவுக்கும் வர்த்தக ரீதியான சர்வதேசப் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை செப்.30-ம் தேதி நள்ளிரவு 11.59 வரை நிறுத்தப்படுகிறது. அதேசமயம், சில முக்கியமான வழித்தடங்களில் மட்டும் சூழலுக்கு ஏற்றாற்போல், நாடுகளுக்கு இடையே மட்டும் சர்வதேச விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.