இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனா 2-வது அலை வருவதற்கான சாத்தியத்தை மறுக்க முடியாது: நிதிஅயோக் உறுப்பினர் எச்சரிக்கை

இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வருவதற்கான சாத்தியத்தை நாம் நிராகரிக்க முடியாது. என்று வல்லுநர்கள் குழுத் தலைவரும், நிதிஆயோக்கின் உறுப்பினருமான வி.கே.பால் எச்சரித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய அரசுஅமைத்துள்ள வல்லுநர்கள் குழுவின் தலைவராகவும், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து தயாரிக்கும் தேசிய வல்லுநர்கள் குழுவின் தலைவராகவும் வி.கே.பால் இருந்து வருகிறார்.

இந்தியாவில் கடந்த இரு வாரங்களாக கொரோனாாவில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது, உயிரிழப்பு குறைந்து வருகிறது, குணமடைந்து வருவோர் அதிகரித்து வருகின்றனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 61 ஆயிரத்து 871 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 74 லட்சத்து 94 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது. இதில் நம்பிக்கை அளிக்கும் வகையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65 லட்சத்து ஆயிரத்து 24 ஆயிரத்து 595 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 88.03 ஆக உயர்ந்துள்ளது. இது நல்ல ஆரோக்கியமான அறிகுறி என்றாலும், அடுத்துவரும் குளிர்காலத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் மக்கள் இருக்க வேண்டும் என்று உலக அளவில் மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஐரோப்பாவில் பல்வேறு நாடுகளில் 2-வது கட்ட அலை உருவாகத் தொடங்கிவிட்டதால், மீண்டும் ஊரடங்கு உத்தரவை பிரான்ஸ், ஜெர்மன் நாடுகள் பிறப்பித்துள்ளன. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தனும் சமீபத்தில் விடுத்த எச்சரிக்கையில், அடுத்துவரும் பண்டிகைக் காலம், குளிர்காலத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நிதிஆயோக்கின் உறுப்பினர் வி.கே. பால் பிடிஐ நிருபருக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவில் கடந்த 3 வாரங்களாக கொரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது, உயிரிழப்பு சரிந்து வருகிறது. குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கிறது. எவ்வாறாகினும், கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களிலும் சில யூனியன் பிரதேசங்களிலும் இன்னும் கொரோனா பரவல் இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இந்தியா சிறப்பான இடத்தில்தான் இருக்கிறது. இருப்பினும், நாட்டில் 90 சதவீத மக்கள் கொரோனா தொற்றுக்கான ஆபத்தான சூழலில்தான் இருக்கிறார்கள். குளிர்காலம் ஐரோபிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் தொடங்க உள்ளது. குளிர்காலம் தொடங்கியபின், ஐரோப்பா முழுவதும் கொரோனாவைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன் இந்தியாவிலும் குளிர்காலத்தில் கொரோனா பரவுவதற்கான சாத்தியங்களை நாம் நிராகரிக்க முடியாது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த வைரஸைப் பற்றி நாள்தோறும் புதிது புதிதாகப் படித்து வருகிறோம். கொரோனா தடுப்பு மருந்துகள் வந்தால் அதை சேமித்து வைக்க தேவையான குளிர்பதன வசதிகள் இந்தியாவில் அதிகமாக இருக்கின்றன. அதை உரிய முறையில் டெலிவரி செய்யவும் போதுமான வசதிகள் உள்ளன. தடுப்பு மருந்துகள் வந்துவிட்டால், அந்த மருந்து அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்க வழிசெய்யப்படும், அதை உரிய முறையில் பகிர்ந்தளிக்கவும் போதுமான வளங்கள் உள்ளன. ஆதலால் அதுபற்றி கவலையில்லை. இவ்வாறு பால் தெரிவித்தார்