உலகிலேயே முதன்முதலாக கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்த ரஷ்யா, தான் தயாரித்த ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு 10 கோடி எண்ணிக்கையில் சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உலகில் பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டதாக முதல் நாடாக ரஷ்யா அறிவித்தது. ஆனால், அதன் பாதுகாப்பு அம்சம் குறித்து பல்வேறு தரப்பினரால் கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் ரஷ்ய அதிபர் புதின் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தியதாக அறிவித்தார். ரஷ்ய அரசு தயாரித்துள்ள ஸ்புட்னிக்-5 தடுப்பூசி வரும் 13 ஆம் தேதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெளியிடப்படும் என ரஷ்ய சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.
இந்தச் சூழலில் இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா நேரடி முதலீடு நிதியம் (ஆர்டிஐஎப்) மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து 10 கோடி மருந்துகளை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 30 கோடி தடுப்பூசி மருந்துகள் தயாரிக்க டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துடன், ரஷ்யா நேரடி முதலீடு நிதியம் (ஆர்டிஐஎப்) ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், ஸ்புட்னிக்-5 தடுப்பூசி மருந்தின் 3-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையை இந்தியாவில் நடத்தவும் ரெட்டிஸ் நிறுவத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் ரஷ்யா நேரடி முதலீடு நிதியம் (ஆர்டிஐஎப்) தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஸ்புட்னிக்-5 தடுப்பூசிகளின் கிளினிக்கல் பரிசோதனையை நடத்த டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. கிளினிக்கல் பரிசோதனை நடத்தப்பட்டால், இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி மருந்து இந்தியாவுக்கு சப்ளையாகும்.
டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் தலைவர் ஜி.பி.பிரசாத் கூறுகையில், “ஸ்புட்னிக் -5 தடுப்பு மருந்து, இந்தியாவில் கரோனாவுக்கு எதிராக நமது போராட்டத்தில் நம்பகத்தன்மையான கருவியாக அமையும். இந்த மருந்தின் விலை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. லாபநோக்குடன் இந்த மருந்தைத் தயாரிக்கவில்லை என்று ஆர்டிஐஎப் முன்பு தெரிவித்திருந்தது. இந்தியாவில் கிளினிக்கல் பரிசோதனையை நடத்த ரஷ்ய நிறுவனம் உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.10 கோடி மருந்துகளை சப்ளை செய்ய ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.