இந்தியாவில் பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரை கடக்கிறது புரெவி புயல்

பாம்பன்-கன்னியாகுமரி இடையே புரெவி புயல், கரையைக் கடக்கும் எனவும், அப்போது தென் தமிழகம், தெற்கு கேரளாவில் தீவிர கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலைத்துறை தெரிவித்துள்ளது. இலங்கையின் மீது மையம் கொண்டிருந்த புரெவி புயல் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து, இன்று காலை 11.30 மணியளவில் மன்னார் வளைகுடாவுக்கு வடமேற்கே 40 கி.மீ தொலைவிலும், பாம்பனுக்கு தென்கிழக்கே 40 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு வடகிழக்கே 260 கி.மீ தொலைவிலும், மையம் கொண்டிருந்தது. இந்த புரெவி புயல் மேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலைக்குள் பாம்பனை நெருங்கிவிடும். பின் மேற்கு – தென் மேற்கு திசையில் நகர்ந்து பாம்பன் – கன்னியாகுமரி இடையே இன்று இரவு மற்றும் நாளை அதிகாலை கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 70 கி.மீ முதல் 90 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசும். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் புயல் பாதிப்பு டிசம்பர் 4ம் தேதி காலை வரை தொடரும். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் தெற்கு கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் இன்று(டிசம்பர் 3ம் தேதி) ஒரு சில இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யும். வட தமிழகம், புதுச்சேரி, மாஹே, காரைக்கால், வடக்கு கேரளா ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் டிசம்பர் 3, 4ம் தேதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆந்திரப் பிரதேசத்தின் தெற்கு கடலோரப் பகுதி, லட்சத்தீவு ஆகிய பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் டிசம்பர் 3,4ம் தேதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக டிசம்பர் 3 முதல் 5 வரை மீனவர்கள், கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.