இந்தியா-சீனா கார்ப்ஸ் கமாண்டர் மட்டத்திலான சந்திப்பு எல்லை பிரச்னை குறித்து 8வது முறையாக ஆலோசனை

இந்திய-சீன எல்லையின் மேற்கு பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோட்டில் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து இருதரப்பின் கார்ப்ஸ் கமாண்டர் மட்டத்திலான சந்திப்பு 8-வது முறையாக நவம்பர் 6-ம் தேதி நடைபெற்றது. லடாக்கின் லே மாவட்டத்தில் உள்ள சுசுல் பகுதியில் நடந்த இந்த சந்திப்பில் இருதரப்பிலும் நேர்மையான , ஆழமான மற்றும் ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. இருநாட்டு தலைவர்களால் எட்டப்பட்ட முக்கியமான ஒருமித்த கருத்துகளை அமல்படுத்துவது என்றும் இரு தரப்பிலும் ஆர்வத்துடன் ஒத்துக்கொள்ளப்பட்டது. தத்தமது நாடுகளின் எல்லையில் இருக்கும் படைகள் சுயக்கட்டுப் பாட்டை கடைபிடிப்பதை உறுதி செய்வது என்றும் தவறான புரிதல்களை தவறான கணக்கீடுகளை தவிர்ப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தூதரக வழியிலும், ராணுவ ரீதியாகவும் பேச்சுவார்த்தைகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்புகளை தொடர்ந்து நிர்வகிப்பது என்றும் இரு நாடுகளின் தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த சந்திப்பின் ஆலோசனையை முன்னெடுத்துச்செல்ல, நிலுவையில் இருக்கும் பிற சிக்கல்களைத் தீர்ப்பதற்கு அழுத்தம் கொடுப்பது என்றும், எல்லைப்பகுதிகளில் அமைதி மற்றும் சுயகட்டுப்பாட்டை பரமாரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.