சில மாநிலங்களில் பேசும் இந்தி எப்படி இந்தியாவை ஒன்றிணைக்கும் மொழியாக இருக்கும்? இந்தி வேற்றுமையில் ஒற்றுமை காணும் மக்களைப் பிரிக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். மத்திய அரசு வலுக்கட்டாயமாக இந்தித் திணிப்பில் ஈடுபட்டு வருவதாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இன்று இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தி மொழி நாட்டு மக்களை ஒருங்கிணைக்கிறது என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அவரது முகநூல் பதிவு:
“இந்திய நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா, இந்தி மொழி இந்நாட்டை ஒருங்கிணைப்பதாகச் சொல்லி இருக்கிறார். பன்முகத் தன்மையுடன் பரந்து விரிந்திருக்கும் இந்நாட்டை, ஒரு சில மாநில மக்கள் மட்டுமே பேசும் மொழி எப்படி ஒருங்கிணைக்க முடியும்? வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கெடுக்கும் ஒன்றாகத்தான் இந்தி இருக்கிறது என்பதை அமித் ஷா உணர வேண்டும். இந்தியைக் காப்பாற்றுவதை விட, கரோனாவில் இருந்து இந்தியரைக் காப்பாற்றுவதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும்”. இவ்வாறு ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.