இந்திய குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளார்கள்

எங்களின் கோரி்க்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் குடியரசுதினத்தன்று டெல்லியில் நடக்கும் அணிவகுப்பு மரியாதை முடிந்தபின் விவசாயிகள் சார்பில் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற பல்வேறு போராட்டங்கள் வாயிலாக விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டன என்று மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது. இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 6 கட்டப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தும் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை. விளைநிலங்களில் வேளாண் கழிவுகளை எரித்தல், மின்கட்டண உயர்வு ஆகியவை பற்றி மட்டும் பரிசீலிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில் வரும் 4-ம் தேதி அடுத்தக் கட்டப்பேச்சு நடக்க உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாவிட்டால், குடியரசு தினத்தன்று டெல்லியே நோக்கி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவோம் என எச்சரித்துள்ளனர். வரும் 26-ம் தேதி குடியரசுத் தினத்துக்கு சிறப்பு விருந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் இந்தியா வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் தர்ஷன் பால் சிங் இன்று நிருபர்களுக்கு அளித்தப் பேட்டியில் “ எங்களின் கோரிக்கைகளுக்கு வரும் 4-ம் தேதி நடக்கும் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால், குடியரசு தினத்தன்று அணிவகுப்பு ஊர்வலம் முடிந்தபின், விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி டெல்லியை நோக்கி நடத்தப்படும்” எனத் தெரிவித்தார். ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் நிருபர்களிடம் கூறுகையில் “ விவசாயிகளின் 50 சதவீத கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக மத்திய அரசு கூறுவது முற்றிலும் பொய். இதுவரை ஏதும் எழுதி உறுதி தரப்படவில்லை. குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதில் எந்த உடன்பாடும் எட்டவில்லை” எனத் தெரிவித்தார். விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குருராம் சிங் சோதனி கூறுகையில் “கடந்த முறை நடந்த பேச்சுவார்த்தையில், 23 பயிர் களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையைத் தரமுடியுமா, அதை எம்எஸ்வி விலையில் வாங்க முடியுமா எனக் கேட்டோம். அதற்கு மத்தியஅரசு முடியாது எனத் தெரிவித்தனர். பின் எதற்காக நாட்டு மக்களுக்கு தவறான செய்தியை சொல்கிறீர்கள். இதுவரை 50 விவசாயிகள் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.