இயக்குநரான தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி

தயாநிதி அழகிரி, ‘தமிழ் படம்’, ‘தூங்காநகரம்’, அஜித்தின் 50வது படம் ’மங்காத்தா’ போன்ற பல வெற்றிப் படங்களைக் கொடுத்த கிளவுட் நைன் மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரையுலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தைப் பெற்றவர், தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி.இதுவரை ஒரு தயாரிப்பாளராக இருந்த தயாநிதி அழகிரி  தனது அடுத்தகட்ட நகர்வாக படைப்புலகிற்குச் சென்றிருக்கிறார். அவர் தற்போது ‘மாஸ்க்’ என்கிற குறும்படத்தை
இயக்கியிருக்கிறார். தொழில் நுட்பம் என்பது இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி போன்றது. அதைச் சரியாகக்  கையாளாவிட்டால் பயன்படுத்துவோருக்கும் ஆபத்தைத் தரக்கூடியது. இது சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும்.

இன்றைய கோவிட்-19 முடக்க காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் தனிப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து தொடர்பு  கொள்ள பேருதவியாக இருந்தன. பலவகையிலும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு  உதவியதை அறிவோம். ஆனால் அதே நேரத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கவும் வதந்திகளைப் பரப்பவும் இந்த
ஊடகத்தைப் பயன் படுத்தியவர்களும் உண்டு. அப்படி ஒருவனைப் பற்றிய கதை தான் மாஸ்க்.ஓர் இளைஞன், தான்  பிரபலமடைவதற்காக, டிவிட்டர் மூலம் எதிர்மறையான விஷயங்களையும், பல்வேறு நடப்பு நிகழ்வுகள் குறித்து  விமர்சித்தும் பகுத்தறிவற்ற முறையில் செய்திகளைப் பதிவிடுகின்றான். இந்த செயலால் அவன் கண்காணிக்கப்பட்டு  இறுதியில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறான். அவன், தான் செய்யும் செயல்களை உணர்கிறானா? அவனது  வாழ்க்கைப் பயணத்தில் அவனுக்கு யார் உதவுகிறார்கள்? அவன் செய்தது உண்மையில் சட்டவிரோதமானதா? அதன்  தாக்கம் என்ன? அவனது எதிர்காலம் என்ன? உலகைப் பார்க்க இதைவிட சிறந்த வழி இருக்கிறதா? என்பதையெல்லாம்  ‘மாஸ்க்’ குறும்படம் கூறும். இப்படத்தைப் பார்த்த திரையுலகப் பிரமுகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்
இக்காலகட்டத்திற்கு ஏற்ற படம் என்று அனைவரும் கருத்துக் கூறி வாழ்த்திவருகிறார்கள்.