இயக்குனர் பா.இரஞ்சித்தின் அடுத்த அறிவிப்பு மார்கழியில் மக்களிசை

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னையில் பல்வேறு அரங்கங்களில் 8 நாட்கள் நடைபெறவுள்ளதாக இயக்குனர் பா.இரஞ்சித் அறிவித்துள்ளார். திரைப்படங்கள் இயக்குவதைக் கடந்து பல்வேறு சமூக, கலைப் பணிகளையும் மேற்கொண்டு வருபவர் இயக்குனர் பா.இரஞ்சித். இவர் தனது நீலம் பண்பாட்டு மையம் மூலம் ஆவணப் படங்களை தயாரித்தல், நாடகங்களை அரங்கேற்றுதல் என சினிமாவை தாண்டிய பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். மேலும் இசை வரலாற்றில் முதல் முறையாக பாப், ராப், கானா, கிராமியம், கர்நாடக இசை என அனைத்து வகையான இசைகளையும், இசைக் கலைஞர்களையும் இணைத்து ‘Casteless Collective’ எனும் இசைக் குழுவையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார்.

‘Casteless Collective’ இசைக்குழு இதுவரை இசையின் மூலமாகவும், பாடலின் மூலமாகவும், பன்னாட்டு வடிவ மேடையில் உள்நாட்டு அரசியல் பற்றிய பாடல்கள், சமூகப்பிரச்சனை பற்றிய பாடல்களை அரங்கேற்றியுள்ளது. அதற்கான அங்கீகாரமாக, பொதுமக்களின் பாராட்டுக் களையும் மற்றும் பல்வேறு விருதுகளையும் ‘Casteless Collective’ குவித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில், புத்தாண்டை சமத்துவ புத்தாண்டாக கொண்டாட வானம் கலைவிழா எனும் நிகழ்ச்சியை இயக்குனர் பா. இரஞ்சித் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்ச்சி பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் நீட்சியாக தற்போது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னையில் பல்வேறு அரங்கங்களில் 8 நாட்கள் நடைபெறவுள்ளது. மக்கள் தொடர்பு: குணசீலன்.