தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய) அலுவலகம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் பணியாளர்கள் கொவிட்-19 வீரர்களாக தொடர்ந்து ஆற்றிய சிறப்பான பணியைப் பாராட்டும் வகையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற இத்துறைக்கான இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) சந்தோஷ்குமார் கங்குவார், கொவிட் பெருந்தொற்றின் போது ஆற்றிய சிறப்பான பணிக்காக தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய) அலுவலகம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் பணியாளர்களைப் பாராட்டினார்.
தொழில்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சகம் எடுத்ததாக குறிப்பிட்ட அமைச்சர், இரண்டு கோடி கட்டுமான தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் ரூபாய் 5,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது என்றார். இதனைத் தொய்வின்றி செயல்படுத்துவதற்காக 80 அலுவலர்களை மத்திய தொழிலாளர் ஆணையம் நியமித்ததாக அவர் மேலும் தெரிவித்தார். தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை களைவதற்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் அலுவலர்கள் இரவு பகல் பாராமல் பாடுபடுவதாக திரு கங்குவார் கூறினார். இருபது கட்டுப்பாட்டு அறைகளில் சுமார் 16,000 புகார்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 96 சதவீத புகார்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய) அலுவலகம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தீர்த்து வைத்ததாகவும் அமைச்சர் கூறினார்.