தமிழ் சமுகப் பண்பாட்டில், தொன்மைக் காலம் தொட்டு இயற்கையை நேசித்தும், உழைப்பைப் போற்றியும் தை முதல் நாள் பொங்கல் விழா, தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எனக் கொண்டாப் படுகிறது. ஆண்டுதோறும் மார்கழி திங்களின் கடைசி நாளில் வழக்கொழிந்து போகும் பயனற்றைவைகளை கழிப்பதும், ஆகாத குப்பைகளை எரிப்பதும், “போகி”ப் பண்டிகை எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்‘ என மனிதர்கள் தன்னம்பிக் கையை புதுப்பிக்கொள்ளும் பண்பாட்டுத் திருவிழாவாக தை முதல் நாள் அமைகிறது. கடந்த ஆண்டு தோன்றிய கொரோனா புதுவகை நோய்த்தொற்று மனிதகுல வாழ்வின் மீது கொடுந்தாக்குதல் நடத்தி வருகிறது. அந்தக் கொடிய நோய்க் கிருமியை தடுக்கவும் இயலாமல், அழிக்கவும் முடியாமல் அறிவியல் உலகமே அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது.
நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்புக்கான முன்னேற்பாடுகள் ஏதுமின்றி, நமது பிரதமர் அறிவித்த நாடு முடக்கம் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக சீர்குலைத்து விட்டது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாய் வீடு திரும்ப வழியின்றி, வீதிகளில் மடிந்த அவலம் அரங்கேறியது. ரொக்கப் பண உதவி செய்து, உயிர்வாழ்வுக்கு உதவுங்கள் என்ற கோரிக்கையை காதில் வாங்க மறுத்து விட்ட, இரக்கமற்ற அரசு பெரும் நிறுவனங்களின் “காவல்காரனாக” செயல்பட்டு வருகிறது.. தொழிலாளர் உரிமைகளை தொடர்ந்து பறித்து வரும் பாஜக மத்திய அரசு, விவசாய நிலங்களை பெருவணிக நிறுவனங்களுக்கு எடுத்துக் கொடுக்கும் விவசாயிகள் விரோத சட்டங்களை நிறைவேற்றி, விவசாயிகளை வீதியில் நிறுத்தியுள்ளது. வாழ்வுரிமை காக்க உழவர் பெருமக்கள் கடுங்குளிரிலும், தொடர் மழையிலும் 48 நாட்களாக போராடி வருகிறார்கள். 60-க்கும் மேற்பட்டோர் போராட்டக் களத்தில் உயிர் தியாகம் செய்துள்ளனர். சென்னை பெருநகரில் ‘பெயிண்டர்’ ஒருவர் விவசாயிகள் படும் துயரம் தாங்காது, தமது இன்னுயிர் துறந்து 56 இஞ்ச் மார்பு அகலம் உள்ள பிரதமருக்கு விண்ணப்பித்துக் கொண்ட செய்தி நெஞ்சைப் பிசைகிறது. ஆனால் இதயம் இல்லா மனிதன் பிரதமர் இரங்கல் செய்தி கூட தரவில்லை என்பது வேதனையானது.
நிவர், புரவி எனத் தொடர்ந்து வந்த இயற்கை சீற்றத்தால் சாகுபடி செய்த பயிர்களை இழந்த விவசாயிகள் கண்ணீர் சிந்தி, உதவிக்கு கையேந்தி நிற்கிறார்கள். தொடரும் மழையால் விளைந்த நெற்கதிர்கள் வயலில் முளைவிடுமோ, எஞ்சிய வாழ்வும் மிஞ்சாதோ என விவசாயிகள் விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள். உழவர்களின் துயரம் பற்றி ஒரு துளியும் கவலைப்படாத ‘விவசாயி மகன்’ அரசு, மாநில உரிமைகளை தொடர்ந்து பறித்து வரும் மத்திய அரசிடம் எண்ணிக்கொள் என்றபடி ‘தோப்புக் கரணம்‘ போட்டு விசுவாசம் காட்டி வருகிறது. திசை எட்டும் நெருக்கடிகள் தீவிரமாகி, இருள் சூழ்ந்திருக்கும் நிலையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, தமிழர் வாழ்வில் இருள் நீக்கும் ஒளிச்சுடராக நம்பிக்கையளிக்கிறது. ‘தமிழகம் மீட்போம்‘ என்ற உறுதி ஏற்று, தன்னம்பிக்கையோடு முன்னேறுவோம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் தைத் திருநாள், உழவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு இரா.முத்தரசன் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.