இறைதூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் ஒரு தடவை பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது.. உடனே சமூக மக்கள் அனைவரையும் பெரிய மைதானம் ஒன்றில் ஒன்று திரட்டி தண்ணீர் பஞ்சம் நீங்க மழைவேண்டி துஆச்செய்தார்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள். .ஆனால், துஆச் செய்து வெகு நேரமாகியும் துஆவிற்கான பதில் இறைவனிடமிருந்து வராததை உணர்ந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “இறைவா! எப்பொழுதும் என் பிரார்த்தனைக்கு உடனடியாகப் பதிலளிக்கும் நீ இன்று ஏன் பதிலளிக்கவில்லை “என்று அல்லாஹ்விடம் கேட்டார்கள். .அதற்கு அல்லாஹ் “மூஸாவே! இங்கு கூடியிருக்கும் ஜனத்திரளில் ஒருவர் சுமார் நாற்பதாண்டு காலமாக எனக்கு மாறு செய்து கொண்டிருக்கின்றார். அவரின் காரணமாகவே நான் பதில் தரவில்லை. அவரை அங்கிருந்து வெளியேறச் சொல்லுங்கள்! உங்கள் துஆவை ஏற்று உங்களுக்கு நான் மழை பொழிவிக்கிறேன் “என்றான். .உடனே, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களிடம் “இங்கு கூடியிருக்கிற மக்களில் ஒருவர் சுமார் நாற்பதாண்டு காலமாக அல்லாஹ்வுக்கு மாறு செய்து கொண்டிருக்கின்றார். அவரின் காரணமாகவே அல்லாஹ் மழையைத் தராமல் தடுத்து வைத்திருக்கின்றான். ஆகவே, அவர் இங்கிருந்து உடனடியாக வெளியேறிச் செல்லவும். இல்லையெனில் ஒட்டு மொத்த சமூகமும் பாதிக்கப்படுவோம் “என்று கூறினார்கள். .உடனே, கூட்டத்தில் இருந்த அந்த மனிதர் தன்னைத்தான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறுகின்றார்கள் என்பதை உணர்ந்து கொண்டார். இங்கிருந்து இப்போது வெளியேறினால் தம்மை அடையாளம் கண்டு சமூக மக்கள் கேவலமாகக் கருதுவார்கள் என்று எண்ணிய அவர் தான் அணிந்திருந்த ஆடையின் ஒரு பகுதியைக் கொண்டு தன் தலைக்கு முக்காடிடுக் கொண்டு …. அல்லாஹ்வே! இதோ இந்த இடத்தில் உன்னிடம் நான் ஒரு உறுதி மொழியைத் தருகின்றேன்! இனி எப்போதும் ஒரு கணமேனும் உனக்கு நான் மாறு செய்யமாட்டேன்! என் காரணத்தால் என் சமூக மக்களை நீ தண்டித்து விடாதே! “என்று பிரார்த்தித்தார். அடுத்த நொடியில் மழை பொழியத்தொடங்கியது. மூஸா அரைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஆச்சர்யம் கூட்டத்தை விட்டு எவரும் வெளியேற வில்லை, ஆனால், மழை பொழிகிறது. அல்லாஹ்விடம் கையேந்தினார்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள். “அல்லாஹ்வே! எவரும் தான் வெளியேற வில்லையே! பின் ஏன் மழையைப் பொழிவித்தாய்! “. .அதற்கு, அல்லாஹ் “மூஸாவே! எந்த மனிதரின் காரணத்தால் நான் மழையைத் தடுத்து வைத்திருந்தேனோ, அவர் இப்போது மனம் திருந்தி என்னிடம் மன்னிப்புக் கோரிவிட்டார். அவரின் காரணத்தினாலேயே நான் இப்போது இந்த மழையை உங்களுக்கு தந்திருக்கின்றேன் “என்று பதில் கூறினான். அப்போது, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “அப்படியென்றால் நீ எனக்கு அவரை அடையாளம் காட்டு” என்று அல்லாஹ்விடம் கேட்டார்கள். அதற்கு, அல்லாஹ் “மூஸாவே! 40 ஆண்டுகளாக எனக்கு மாறு செய்து கொண்டிருந்த போது அவரைப் பிறரிடம் காட்டிக்கொடுத்து அவமானப் படுத்தாத நான் .. தற்போது மனம் திருந்தி என் அருள் வாசலுக்கு வந்த பின்னர் எவ்வாறு பிறருக்கு நான் காட்டிக் கொடுப்பேன் “என்று பதில் கூறினான். .ஓர் அடியான் கேவலப்பட்டு மக்கள் மன்றத்திலே நிறுத்தப்பட்டு, நிம்மதியின்றி வாழ்வதை அல்லாஹ்வே விரும்பவில்லை. அதே நேரம் தௌபாச் செய்து மன்னிப்புக் கேட்ட ஓர் நல்லடியானின் ஸிர்ரையும் (இரகசியம்) ஒரு
நபிக்குக் கூட வெளிப்படுத்த அல்லாஹ்தாலா நாயன் விரும்பவில்லை. இதிலிருந்து ஒரு நல்லடியான் மீது அந்த றப்பில் ஆலமீன் எந்தளவு கருணை உள்ளவன் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றதல்லவா?
நூல்: – இப்னு கஸீர்
தொகுப்பு: அபுதாஹிர்
மயிலாடுதுறை