இலங்கையின் சீனச் சார்பு மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானம்; தமிழ் ஈழம் அமைய பொது வாக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு, வைகோ கடிதம் (10 ஜூன் 2021)

அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு,

வணக்கம்.

தெற்கு ஆசியாவில், இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் ஆளுமையை நிலைநிறுத்துவதற்கு, தமிழ் ஈழம் அமைந்தாக வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கின்றது. அதற்கான சூழ்நிலைகளை, தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன்.  கடந்த காலங்களில், இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நாடாக இலங்கை இருந்தது இல்லை. அண்டை நாடு என்கின்ற முறையில், இந்தியா இலங்கைக்குக் கூடுதல் முன்னுரிமை வழங்கினாலும் கூட, இக்கட்டான வேளைகளில், அவர்கள் இந்தியாவின் காலை வாரி விடுகின்றார்கள். தாங்கள் ஒரு சீனச் சார்பு நாடு என்பதை, அவர்கள் பலமுறை எடுத்துக் காட்டி இருக்கின்றார்கள்.  மகிந்த இராஜபக்சே, இலங்கைக் குடி அரசின் தலைவராகப் பொறுப்பு ஏற்பதற்கு, இந்தியா மறைமுக ஆதரவு அளித்தது. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற அவர், அம்பாந்தோட்டை துறைமுகத்தில், சீன நீர்மூழ்கிக் கப்பல் நுழைய ஒப்புதல் வழங்கினார். இந்தியப் பெருங்கடலில், முதன்முறையாக, சீன நீர்மூழ்கிக் கப்பல் நுழைந்தது. அவருக்கு அடுத்து ஆட்சிப் பொறுப்பு ஏற்ற மைத்திரிபால சிறிசேனா, மற்றொரு சீன நீர்மூழ்கிக் கப்பலை, அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய விட்டார். இலங்கைக்கு அளவுக்கு அதிகமான கடன் கொடுத்து, 99 ஆண்டுகள் குத்தகை என்ற பெயரில், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கைப்பற்றி விட்டது. இப்போது, ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சியில், இந்தியப் பெருங்கடலில் சீனமயமாக்கல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இலங்கை தலைநகர் கொழும்புவில் ஒரு நிலப்பரப்பை, சீனாவுக்குக் கொடுத்து விட்டனர். இலங்கை நாடு முழுமையும், சீன உதவியுடன் நடைபெறுகின்ற கட்டுமானப் பணிகளில், ஐந்து இலட்சம் சீனத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றார்கள். அவர்களுள் ஒரு பகுதியினர், சீன உளவுத்துறையினர் என்பதில் ஐயம் இல்லை. அவர்களுக்காக, சீன மொழிப் பள்ளிகள், சீனக் கலை அமைப்புகள், சீனப் பயிற்சியாளர்களின் கராத்தே வகுப்புகள், இலங்கையில் தொடங்கப்பட்டுள்ளன. தெருக்கள், தொடர்வண்டி நிலையங்கள், விடுதிகளின் பெயர்ப் பலகைகளில், சீன மொழி எழுத்துகள் எழுதப்பட்டு வருகின்றன.  தமிழ் ஈழப் பகுதிகளில், அனலைத் தீவு, நெடுந்தீவு, நயினா தீவு ஆகிய பகுதிகளில் அமைய இருக்கின்ற சூரிய மின்விசைத் திட்டமும், சீனாவுக்குத் தரப்பட இருக்கின்றது. வத்தலான் என்னும் சிற்றூரில், சிறுவர்களுக்கான பூங்காவை சீன முதலீட்டாளர்கள் வடிவமைத்து இருக்கின்றார்கள். பூங்காவின் நுழைவாயிலில், சீனர்களின் நெடும்பாம்பு (டிராகன்) சின்னத்தை வரைந்து இருக்கின்றார்கள்.
எனவே, இலங்கை நாடு சீனாவின் தளமாக மாறி வருகின்றது. இந்த நிலையில், இந்திய எல்லையை ஒட்டி இருக்கின்ற, தமிழ் ஈழம் மட்டுமே, இந்தியாவின் தளமாக இருக்க முடியும். கடந்த காலங்களில், இலங்கை சீனாவின் பக்கம் சாய்ந்த வேளைகளில், இலங்கையின் ஆட்சித்தலைமையை மாற்றும் அணுகுமுறையை இந்தியா கடைப்பிடித்தது. ஆனால், இனி அந்த அணுகுமுறை வெற்றி பெறாது.  
லண்டன் கிங்ஸ் கல்லூரியில், அனைத்து நாடுகள் உறவு மற்றும் பாதுகாப்பு ஆய்வுத்துறைப் பேராசிரியராகப் பணிபுரிகின்ற, ஆற்றல்மிக்க எழுத்தாளர் ஹர்ஷ் வி. பந்த் (Harsh V. Pant), 29.01.2015 ஆம் நாள், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே தருகின்றேன்.

Indian policymakers will be mistaken if they think a change of regime in Colombo, will lead to a dampening of Sino-Sri Lanka ties. China’s role is now firmly embedded in Sri Lanka-economically as well as geopolitically. India will have  to  up it’s game, if it wants to  retain it’s leverage in Colombo.  

-Harsh V. Pant, Professor in International Relations, Department of Defence Studies, King’s college, London.

இந்திய கொள்கை வகுப்பாளர்கள், இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நினைத்தால், தவறாக முடியும்; அது சீன இலங்கை உறவுகளைச் சீர்குலைக்கும்; பொருளாதாரம் மற்றும் புவிசார் அடிப்படையில், இலங்கையில் இப்போது சீனாவின் பங்கு உறுதியாகி இருக்கின்றது; கொழும்பில் தன் செல்வாக்கை நிலைநிறுத்த இந்தியா விரும்பினால், ஒரு விளையாட்டு ஆடித்தான் ஆக வேண்டும்.   
எனவே, தமிழ் ஈழத்தைக் காக்கவும், ஈழத்தமிழர்களின் இறையாண்மையை நிலைநாட்டவும்  இந்தியா தவறினால், இந்தியப் பெருங்கடலில் ஆளுமையை இழக்க நேரிடும்; சீனாவுக்கு இடம் தருவதாக ஆகி விடும். அவ்வாறு, தமிழ் ஈழத்திற்குத் துணையாக நின்றால், சிங்கள இலங்கை அரசு, சீனாவின் முழு ஆதரவு நாடு ஆகி விடும் என்பது தவறான கணிப்பு ஆகும். தமிழ் ஈழம் அமைந்தால், இலங்கை வலு இழந்து விடும்; இந்தியாவைப் பகைத்துக் கொள்ள மாட்டார்கள்.  இலங்கை சீன ஆதரவு நாடு ஆகிவிடும் என்று, நமது அயல் உறவுக் கொள்கை வகுப்பாளர்கள் சிலர் கருதுவது, கால விரயம் ஆகும்; இப்போதும்கூட, இலங்கை, சீன ஆதரவு நாடுதான். இலங்கையில் சீனாவின் பிடி மேலும்மேலும் இறுக வாய்ப்பு அளிப்பது இந்தியாவுக்குக் கேடாகவே முடியும். எனவே, இந்தியப் பெருங்கடலில்,இந்தியாவின் உறுதிமிக்க ஆளுமை, அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரத் தளமாக, இறையாண்மை உள்ள தமிழ் ஈழம்தான் இருக்க முடியும்.  2021 மே 18 ஆம் நாள், அமெரிக்க நாடாளுமன்றத்தின் (House of Representatives) 117 ஆவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வில், நிறைவேற்றப்பட்ட 413 ஆவது தீர்மானம், ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை விரிவாகப் பட்டியல் இட்டு, உலக நாடுகள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருக்கின்றது.  அந்தத் தீர்மானத்தின் சில பகுதிகளை, இங்கே மேற்கோள் காட்ட விழைகின்றேன்.  இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் இறந்தனர்; காணாமல் போயினர்; புலம் பெயர்ந்து சென்றனர்;  ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு, 2019 ஆம் ஆண்டு, ராஜபக்சே அரசு பொறுப்பு ஏற்றதை அடுத்து, மனித உரிமைகள் மன்றத்தின் 30-1 தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகிக் கொண்டது;
தமிழர்களின் மரபுவழித் தாயகமான, அந்த நாட்டின் வடகிழக்கு நிலப்பரப்பில், போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்களில், படைகள் குவிக்கப்பட்டு, இரண்டு பொதுமக்களுக்கு ஒரு படை வீரர் என்ற வகையில் நிற்கின்றனர்;  

இலங்கையின் வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தில், ஆயுதப் போராட்டத்தின்போது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை கோரியும், வடக்கு-கிழக்கு நிலப்பரப்பில், ஐ.நா.மன்றத்தின் மேற்பார்வையில், பொது வாக்குப்பதிவு நடத்தி நிலையான தீர்வு காணக் கோருகின்றது;  இலங்கை அரசு, பல ஆண்டுகளாக, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவில்லை; அதனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டும் அன்றி, ஒட்டுமொத்தமாக இலங்கை நாடு முழுமையும், ஊர் ஆட்சி மன்றங்களைத் தேர்ந்து எடுக்கின்ற உரிமை, மக்களுக்கு மறுக்கப்பட்டு இருக்கின்றது;  2021 ஆம் ஆண்டு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, கடந்த ஆண்டுகளில், இலங்கை அரசு-

(1) போர்க்குற்றங்கள் புரிந்தவர்களை உயர் பதவிகளில் அமர்த்தி இருக்கின்றது;
(2) போர்க்குற்றம் இழைத்தவர் என அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு, பொது மன்னிப்பு வழங்கி இருக்கின்றது;  (3) மக்கள் ஆட்சியை வலுப்படுத்துகின்ற சீர்திருத்த நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு,  அனைத்து அதிகாரங்களையும், குடிஅரசின் தலைவரிடம் குவித்து இருக்கின்றது;
(7) ஆட்சியாளர்களை எதிர்ப்பவர்களைக் கடத்துவதற்கும், துன்புறுத்துவதற்கும் பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்துகின்றது;  மேலும், போர்க்குற்றம் இழைத்தவர்கள் எனக் குற்றம் சாட்டப்படுவோரை, நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்களுக்கு எதிரான சான்றுகளைத் திரட்டுகின்ற முயற்சிகளுக்கும், அரசு தடைகளை ஏற்படுத்துகின்றது; சட்டத்தைப் புறந்தள்ளி, கைது செய்கின்றது. மேலும், வழக்கு ஒழிந்துபோன, மிகக் கடுமையான, வன்முறையாளர்களை அடக்குகின்ற சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பன்னாட்டு நடைமுறைகளுக்கு எதிரான, திரும்பப் பெறுவதாக அரசே பலமுறை உறுதிமொழி அளித்தபடி திரும்பப் பெறாத, அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்துகின்றனர்.  மேலும், 2021 ஜனவரி மாதம், ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையர் மிச்சேல் பேச்சலெட் குறிப்பிட்டபடி, தேசிய மட்டத்தில், பொறுப்பு உணர்வை முன்னெடுத்துச் செல்ல, அரசாங்கத்தின் இயலாமை மற்றும் விருப்பம் இன்மையைக் கருத்தில் கொண்டு, பன்னாட்டுக் குற்றங்களுக்கான நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பன்னாட்டு அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய வேளை இது.
ஆயுதப் போரின் போதும், அதைத் தொடர்ந்தும், காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு, தங்களது அன்புக்கு உரியவர்கள் இருக்கின்ற இடம் குறித்து, இதுவரை எந்தத் தகவலும் இல்லை; போரின் முடிவில், அரசாங்கத்திடம் சரண் அடைந்தவர்கள் குறித்தும், இதுவரை எந்தப் பட்டியலும் வெளியிடப்படவில்லை.  எனவே, இந்த அவை (House of Representatives) நிறைவேற்றும் தீர்மானம்:

1. இலங்கையில் ஆயுதப் போர் முடிந்த 12 ஆம் ஆண்டு நினைவு நாளில், போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது;

2. இறந்தவர்களின் நினைவை மதித்துப் போற்றுகின்றது; நல்லிணக்கம், மறுவாழ்வு, இழப்பு ஈடு மற்றும் சீர்திருத்தங்களுக்கான தேடலில், இலங்கையில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் உறுதுணையாக இருக்க உறுதி பூணுகின்றது;

3. மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் முன்னுரிமை அளித்த, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மன்றத்தைப் பாராட்டுகின்றது; இந்த நடவடிக்கைகளில், இலங்கை அரசு தலையிடக் கூடாது.

4. இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களிலும் நீதிக்காகப் போராடுகின்ற வழக்குஉரைஞர்கள், அரசாங்க பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்பட்டு வருகின்ற, காணாமல் போன தமிழர்களின் குடும்பத்தினரின் துணிச்சலைப் பாராட்டுகின்றது;  

5. இலங்கையில் வரலாற்றுக் காலந்தொட்டு ஒடுக்கப்பட்டு வருகின்ற, வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் வாழ்கின் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும்படி, பன்னாட்டு சமூகத்தை வலியுறுத்துகின்றது; இன மோதல்களுக்கு வழிவகுத்த அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முழுமையான அரசியல் தீர்வை நோக்கி செயல்பட வேண்டும்;

7. இலங்கையில் போரின்போது நிகழ்ந்த கடுமையான குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறலுக்கான, நம்பகமான மற்றும் பயனுள்ள, பன்னாட்டுப் பொறிமுறையை நிறுவ, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, பாதுகாப்பு சபை, மனித உரிமைகள் மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுமாறு, அமெரிக்காவை வலியுறுத்துகின்றது.  இவ்வாறு, அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது.  எனவே, உலக வரைபடத்தில், இஸ்ரேல் என்ற நாட்டை யூதர்கள் ஆக்கியது போல்,  வங்கதேசம் என்ற நாட்டை இந்தியா ஆக்கியது போல், தமிழ் ஈழம் என்ற நாட்டை  அமைப்பதற்கு, ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், உலகம் முழுமையும் பல நாடுகளில் பரவி வாழ்கின்ற ஈழத்தமிழர்களிடம் பொது வாக்குப்பதிவு நடத்துவதற்கான முயற்சிகளை,  இந்திய ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.  இவ்வாறு, வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.