இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு செல்லும் ஐ.நா.வின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் அந்நாட்டு ராணுவம் நடத்திய ஈழ இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையின் படி, பத்து ஆண்டுகளை கடந்தும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நாவின் 46-வது கூட்டத்தொடரில், இனப்படுகொலை குற்றங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. 47 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இந்தியாவும் உள்ள நிலையில், இந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், இந்தியா தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காது என்ற உத்திரவாதத்தை அளித்துள்ளது என்று அந்த நாட்டின் வெளியுறவுத்துறைச் செயலர் ஜெயநாத் கொலம்பகே அதிகாரப் பூர்வமாகவே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்நாட்டு அதிபர் இந்திய அரசை தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, கடந்த 2014ம் ஆண்டின் போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, ஐ.நா. விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது. இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த இருந்த நிலையில் அந்த குழுவின் விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க மறுத்த போது, இலங்கையின் நெருங்கிய நாடான இந்தியாவிலிருந்து விசாரணை நடத்துவதற்காக அனுமதி இந்திய அரசிடம் கோரப்பட்டது. ஆனால் இலங்கை உள் விவகாரங்களில் மனித உரிமைக் குழுக்கள் தலையிடக் கூடாது என்று கூறி ஐ.நா அதிகாரிகளுக்கான விசாவை வழங்க பாஜக அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து நியூயார்க், பாங்காக் மற்றும் ஜெனீவா ஆகிய மூன்று இடங்களில் விசாரணை மையங்களை அமைத்து, அங்கிருந்தவாறு இலங்கையில் உள்ள சாட்சிகளிடம் இணையதளம், செயற்கைக்கோள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் மூலம் விசாரணையை ஐ.நா குழு நடத்தியது. அதனைத் தொடர்ந்து தான் இனப்படுகொலை குற்றங்களைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல ஐ.நா. மனித உரிமை ஆணையம் முடிவெடுத்து நாளை (மார்ச்.22) தீர்மானம் நிறைவேற்றவுள்ளது. இலங்கை வெளியுறவுத்துறைச் செயலர் கூறுவதுபோல் ஐ.நாவின் தீர்மானத்துக்கு எதிராக மத்திய அரசின் முடிவு அமையுமானால், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக கொடூரமான செயல்களுக்கு இந்தியாவும் ஆதரவளித்தது போல் ஆகிவிடுவோம். இனப்படுகொலை விவகாரத்தில் இலங்கை ஆட்சியாளர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அது பெரும் ஏமாற்றமாக இருக்கும். ஆகவே, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத் தும் வகையிலும், தமிழர்களின் நலனை காக்கும் வகையிலும் இந்தியா ஐ.நாவின் தீர்மானத் திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் இலங்கை இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க இந்தியா ஐ.நாவின் மனித உரிமை தீர்மானத்துக்கு ஆதரவாக செயல்பட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.