இஸ்ரேல் நாட்டில் திடீர் திருப்பமாக 8 கட்சிகள் அடங்கிய கூட்டணி வெற்றிபெற்று புதிய பிரதமர் பதவியேற்றார். 12 ஆண்டுகளாக பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்டுள்ளார். 120 இடங்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 8 எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி 60 எம்பிக்கள் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. பெஞ்சமின் நெதன்யாகு கட்சிக்கு 59 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஒரு எம்பி வாக்கெடுப்பை புறக்கணித்தார். எதிர்க்கட்சிகள் கூட்டணியின் வெற்றிக்கு நெதன்யாகு ஆதரவு எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சுழற்சி முறையில் பிரதமர் பதவி வகிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி யமினா கட்சித் தலைவர் நஃப்தலி பென்னட் இஸ்ரேலின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் அதிகாரபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். அவர் இப்பதவியை இரண்டு ஆண்டுகள் மட்டும் வகிப்பார். அவரது அமைச்சரவையில் 9 பெண்கள் உள்பட 27 பேர் இடம்பெற்றுள்ளனர். ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாக இஸ்ரேல் புதிய பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார்.