சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், புனித தோமையர்மலை மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்புகளுக்கு சென்று காவலர் குடும்பத்தினர் குறைகளை கேட்டறிந்தபோது, சமுதாயநல கூடம் வேண்டியதின்பேரில், கட்டிட பணிகளை துரிதப்படுத்தி, விரைவாக கட்டி முடித்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் 11.8.2020 அன்று புனித தோமையர்மலை ஆயுதப்படை வளாக சமுதாய நலக் கூடத்தையும், 09.9.2020 அன்று புதுப்பேட்டை ஆயுதப்படை வளாக சமுதாயநலக் கூடத்தையும் திறந்து வைத்து, காவலர் குடும்பங்களின் தேவைகளுக்காக வழங்கினார். மேலும், புனித தோமையர்மலை குடியிருப்பில் வசிக்கும், பணியின்போது இறந்த ஒரு காவலரின் பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருந்தது தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி காவலர் குடும்பத்தினருக்கு காவல் ஆணையாளர் கல்வி உதவி தொகையை செலுத்த உதவினார். இதன் தொடர்ச்சியாக, காவல் ஆணையாளரின் சீரிய முயற்சியின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் சென்னை பெருநகர காவல் பணியின்போது இறந்த காவலர் குடும்பங்களின் விவரங்கள் மற்றும் வாரிசுகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களது கல்வி கட்டணம் செலுத்த பொருளாதார வளர்ச்சி, அறிவு வளர்ச்சி சார்ந்த சேவைப் பணிகள் செய்து வரும் சர்வதேச சமண வர்த்தக அமைப்பினர் (JITO – Jain International Trade Organization) இறந்த காவலர்களின் படிக்கும் குழந்தைகளுக்கு கல்வித்தொகை வழங்க உதவ முன்வந்தனர்.
அதன்பேரில், மறைந்த காவலர் குடும்பத்தைச் சேர்ந்த 96 மாணவ, மாணவிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி கல்வி தொகை ரூ.10,75,000/-க்கான காசோலையை சர்வதேச சமண வர்த்தக அமைப்பினர் (JITO) சார்பாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலிடம் 17.9.2020 அன்று மாலை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் வழங்கினார். தொழிற்சார்ந்த மேற்படிப்புக்கு (Professional Course) 13 நபர்களுக்கு தலா ரூ.25,000/- வீதம் ரூ.3,25,000/-, 2)கல்லூரி இளங்கலை (UG) படிப்புக்காக 14 நபர்களுக்கு தலா ரூ.15,000/- வீதம் ரூ.2,10,000/- 3)கல்லூரி முதுநிலை (PG) படிப்புக்காக ஒரு நபருக்கு ரூ.15,000/-, 4)டிப்ளமோ படிப்புக்கு 2 நபர்களுக்கு தலா ரூ.15,000/- வீதம் ரூ.30,000/- , 5)பள்ளி படிப்புக்கு 66 நபர்களுக்கு தலா ரூ.7,500/- வீதம் ரூ.4,95,000/- என மொத்தம் ரூ.10,75,000/- இறந்த காவல்துறை வாரிசுகளான மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவல் மகேஷ் குமார் அகர்வால் பணி செய்து வரும் காவல் ஆளிநர்களின் 123 குடும்ப வாரிசுகளுக்கு விரும்பிய கல்லூரிகளில் விரும்பிய பாடப் பிரிவிற்கான அனுமதி சீட்டினையும், சில கல்வி நிறுவனங்களில் இலவச கல்வியையும் பெற்றுத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) A.அமல்ராஜ், இணை ஆணையாளர்கள் ர.சுதாகர், (கிழக்கு மண்டலம்), S.மல்லிகா, துணை ஆணையாளர்கள் பெரோஸ்கான் அப்துல்லா, (நிர்வாகம்), காவல் அதிகாரிகள், JITO அமைப்பின் தலைவர் தௌலத் ஜெயின், செயலாளர் நிமிஷ் தொலியா, உதவித்தொகை தலைவர் கௌதம் பிபி ஜெயின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.