உ.பி.யில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம் பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாகி மரணமடைந்ததிற்கு ராகுல் பிரியங்கா கண்டனம்

உ.பி.யின் ஹத்ராஸ் நகரில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், பல்ராம்பூர் மாவட்டத்திலும் இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ள சம்பவத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கண்டித்துள்ளனர். ஹத்ராஸ் பகுதியில் 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்வலை அடங்குவதற்குள் பல்ராம்பூரில் அடுத்த சம்பவம் நடந்துள்ளது. பல்ராம்பூரில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பம் வாங்கிவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோது 4 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அதன்பின் அந்தப் பெண்ணை அவரின் வீட்டின் முன் அந்தக் கும்பல் வீசிவிட்டுத் தப்பியது. அந்தப் பெண்ணின் கால்கள் உடைக்கப்பட்டு, இடுப்பு எலும்புகளும் உடைக்கப்பட்டதாக பெண்ணின் தாயார் குற்றம் சாட்டினார். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் உடலும் பெற்றோர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, நேற்று தகனம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், “உ.பி.யில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், அட்டூழியங்கள் வெட்கமில்லாமல் தொடர்ந்து வருகின்றன. பெண்கள் உயிருடன் இருக்கும்போதும் மரியாதை அளிக்கவில்லை, இறந்தபின்பும் அவர்களின் மதிப்பைப் பறித்துக் கொண்டார்கள்.

பெண் குழந்தைகளைக் காப்போம் என்பது பாஜகவின் முழக்கம் அல்ல. அதில் உண்மைகளை மறைப்போம்; ஆட்சியைக் காப்போம் என்பதுதான் கோஷம்” எனக் கண்டனம் தெரிவித்து பல்ராம்பூர் ஹாரர் எனும் ஹேஷ்டேகையும் ராகுல் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ஹத்ராஸில் நடந்த கொடூரமான சம்பவம், பல்ராம்பூரில் நடந்துள்ளது. தாழ்த்தப்பட்ட பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, கால்களும், இடுப்பு எலும்புகளும் முறிக்கப்பட்டுள்ளன. ஆசம்கார்க், பாக்பத், புலந்த்சாஹரில் பெண்கள் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டார்கள். உத்தரப் பிரதேசத்தில் காட்டாட்சி எல்லையில்லாமல் பரவுகிறது. சட்டம் ஒழுங்கு என்பது வெறும் வார்த்தையிலும், விளம்பரத்திலும் மட்டுமே இருக்கிறது. உ.பி. முதல்வர் தனது நம்பகத்தன்மையைக் காப்பாற்றும் நேரம் இது. முதல்வரிடம் இருந்து நம்பகத்தன்மையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “உ.பி.யில் சட்டம் ஒழுங்கு உயிருடன் இருக்கிறதா அல்லது செத்துவிட்டதா? அரசியலமைப்புச் சட்டப்படி நடக்கும் அரசா அல்லது கிரிமினல்களுக்காக நடக்கும் அரசா? ஹத்ராஸ், பல்ராம்பூர் சம்பவத்தைத் தொடர்ந்து ஏன் இன்னும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பதவியை ராஜினாமா செய்யவில்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.