உத்தரபிரதேசத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்த தலித் பெண்ணின் கிராமத்திற்கு சென்று ஆறுதல் கூற முற்பட்ட ராகுல்காந்தி அவர்களை காவல்துறையினர் தடுத்து வன்முறைச் செயலில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரின் அராஜக நடவடிக்கை காரணமாக ராகுல்காந்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கீழே தள்ளப்பட்ட செய்தி மிகுந்த வேதனைக்குரியது, கண்டனத்திற்குரியது. உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் மனிதாபிமானமற்ற காட்டு மிராண்டித்தனமான ஆட்சி நடைபெறுவதையே இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. பாதிக்கப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற மக்களவை உறுப்பினராக இருக்கிற திரு. ராகுல்காந்தி அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்ற முறையில் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயன்ற அவரை உத்தரபிரதேச போலிசார் தடுத்து நிறுத்தியதோடு, கைது செய்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட தலித் பெண்ணிற்கு நீதி கிடைக்கும் வரை திரு. ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் இதற்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது