உத்தரப்பிரதேச மாநிலத்தில் சில காட்டுமிராண்டிகளால் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் வன்கொடுமைக்கும் கற்பழிப்புக்கும் ஆளாக்கப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்கு உரிய இழிசெயலாகும். அவரது உடல் அவரது பெற்றோரிடம் காட்டப்படாமலும் தகவல் சொல்லப்படாமலும் அவர்களின் அனுமதி பெறப்படாமலும் சட்டத்திற்கு புறம்பாக மனித நீதிக்குப் புறம்பாக காவல் துறையாலேயே எரிக்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சிக்குரியதாகும். இது காவல்துறையின், உத்தரப் பிரதேச பிஜேபி அரசின் அத்து மீறிய செயலாகும். மகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல சென்ற தலைவர் திரு. ராகுல்காந்தி எம்பி, பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி ஆகியோரின் கார்கள் மறிக்கப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது. காரில் இருந்து இறங்கி நடந்து சென்ற திரு. ராகுல் காந்தி அவர்களையும் திருமதி . பிரியங்கா காந்தி அவர்களையும் தடுத்து நிறுத்தியது, ஜனநாயக விரோதமாகும். 100 ஆண்டுக்கும் மேலாக இந்திய திருநாட்டின் முதன்மை கட்சியாகவும் சுதந்திரம் பெற்றுத்தந்த கட்சியாகவும் உள்ள காங்கிரஸ் கட்சியின் முதன்மை தலைவரும் மற்றும் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் குடும்பத்தை சார்ந்த மோடியின் சிம்மசொப்பனமாக திகழும் இந்திய மக்களின், பாதிக்கப்பட்ட மக்களின் ஒரே தேசிய குரலாக இந்திய நாடு முழுதும் திகழும் தலைவர் ராகுல் காந்தி அவர்களை சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளியும் நெஞ்சிலும் கழுத்திலும் கை வைத்து அடித்தும் லத்தியால் அடித்தும் நடந்துள்ள பிஜேபி அரசின் காட்டுமிராண்டித்தனமான நாகரீகமற்ற கொடும் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
ராகுல் காந்தி உள்ளிட்டோர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். தலைவர் திரு ராகுல் காந்தி மீது கைவைத்த காவல்துறை அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரிக்க நீதிபதி தலைமையிலான விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை அரசியல் தலைவர்கள் சென்று பார்ப்பது எந்த வகையில் ஜனநாயக விரோதம்? காவல்துறையினர் உடன் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு வருவதற்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு பதிலாக தடுப்பதும் தாக்குவதும் காவல்துறையே காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதும் அதுவும் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களுக்கு இந்த நிலை என்றால் நாட்டில் சாதாரண மக்களுக்கு மோடி யோகி ஆகியோரின் அரசில் என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? விநாச காலே விபரீத புத்தி என்பது போல் மக்கள் மத்திய மாநில பிஜேபி அரசுகளை தூக்கி எறியும் காலம் விரைவில் வரும். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.