வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக இருக்கும் மற்ற விவசாய சங்கங்களுடன், எங்களுக்கு இணையாகப் பேச்சுவார்த்தை நடத்துவதை முதலில் நிறுத்துங்கள் என 40 விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகளில் பெரும்பகுதியைக் கொண்ட சன்யுக்த் கிசான் மோர்ச்சா எனும் விவசாயிகள் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியின் பல்வேறு எல்லைகளிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 21-வது நாளை எட்டியுள்ளது. பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநில விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் நடத்திய 5 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த 40 தலைவர்கள் நேற்று முன்தினம் டெல்லி எல்லையின் பல்வேறு பகுதிகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இனிவரும் நாட்களில் போராட்டத்தைத் தீவிரப்படுத்த விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, விவசாயிகள் சங்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக இருக்கும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதற்குப் போராடும் விவசாயிகள் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மத்திய வேளாண்துறை மற்றும் விவசாயிகள் நலனுக்கான இணைச் செயலாளர் விவேக் அகர்வாலுக்கு, சன்யுக்த் கிசான் மோர்ச்சா விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினர் தர்ஷன் பால் எழுதிய கடிதத்தில் கூறுகையில், ”போராடும் விவசாயிகளை அவமானப்படுத்துவதை முதலில் அரசு நிறுத்த வேண்டும். எங்களுக்கு இணையாக, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக இருக்கும் மற்ற விவசாயிகள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதையும் அரசு நிறுத்த வேண்டும். கடந்த 9-ம் தேதி மத்திய அரசும், நீங்களும் முன்வைத்த திட்டமான, வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருகிறோம் என்பது விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடத்திய ஆலோசனையில் நிராகரிக்கப்பட்டது. எங்கள் தரப்பில் முன்கூட்டியே நடத்திய பேச்சு வார்த்தையில் எங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்துவிட்டோம் என்பதால், உங்களுக்குப் பதில் கடிதம் எழுதவில்லை” எனக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாரதிய கிசான் சங்கத்தினர் சார்பில் நேற்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரைச் சந்தித்து வேளாண் சட்டங்களி்ல் திருத்தம் கொண்டுவருவது குறித்த வேண்டுகோளை முன்வைத்தனர். ஆனால், இந்த பாரதிய கிசான் யூனியன், போராடும் விவசாயிகள் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லை. இந்த அமைப்பினர் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளித்துள்ளதும், அவர்களை அழைத்து மத்திய அரசு பேசியதும் போராடும் விவசாயிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது.