பல லட்சக்கணக்கான பழங்குடி தொழில்முனைவோர் பெரிய சந்தைகளை சென்றடைய உதவும் அதே வேளையில், கவர்ச்சிகரமான மற்றும் பயனுள்ள பொருட்களை அதன் வாடிக்கை யாளர்களுக்கு டிரைப்ஸ் இந்தியா தொடர்ந்து வழங்கி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் சமூகத்திற்கு பயனளிக்கும் பல்வேறுப் பொருட்களை டிரைப்ஸ் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் இயற்கை மற்றும் வன பசுமை பொருட்கள் வரிசையின் கீழ் இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாரம் இன்னும் அதிக பொருட் களை டிரைப்ஸ் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில், குஜராத்தில் உள்ள கிராம் சங்கதன் கம்போடியாவின் கீழ் செயல்படும் வசவாடிரைபல்சின் சஹேலி என்னும் சுற்றுச் சூழலுக்கு உகந்த சானிடரி பேடுகள் குறிப்பிடத் தகுந்தவை ஆகும். இவற்றை நாடு முழுவதும் விநியோகிக்க மேற்கண்ட அமைப்புடன் டிரைப்ஸ் இந்தியா கூட்டு சேர்ந்துள்ளது. இயற்கை மற்றும் வன பசுமை பொருட்கள் வரிசையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பொருட்களில் பரிசளிக்கக் கூடியவை மற்றும் அலங்காரத்திற்கு உகந்தவையும் உள்ளன.
இது குறித்து பேசிய இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சி கூட்டமைப்பின் (டிரைஃபெட்) நிர்வாக இயக்குநர் திரு பிரவிர் கிருஷ்ணா, “பழங்குடியினரின் வாழ்வை மாற்றியமைக்கவும், அவர்களது வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் டிரைப்ஸ் இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது,” என்றார். விநாயகர், லட்சுமி ஆகிய கடவுளர்களின் கண்கவர் சிலைகளும் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பொருட்களில் அடங்கும். இவை பரிசுப் பொருட்களாக வழங்குவதற்கு உகந்தவை. இவை டிரைப்ஸ் இந்தியா மையங்களிலும், டிரைப்ஸ் இந்தியா நடமாடும் கடைகளிலும், டிரைப்ஸ் இந்தியாவின் மின் வணிக தளமான tribesindia.com-லும், இதர மின் வணிக தளங்களிலும் கிடைக்கும்.