இந்திய ஒன்றிய நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையமான நெய்வேலி என்.எல்.சியில் ஏற்பட்டு வரும் தொடர் உயிர்பலிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. கடந்த மே மாதம் 7 உயிர்களை பலி வாங்கிய அதே இடத்தில் இப்போது (01.07.2020) கொதிகலன் வெடித்ததில் 7 ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஒரு நிரந்தர தொழிலாளர் உட்பட 8 பேர் உயிரிழந்ததோடு 12 பேர் பலத்த காயங்களுடனும் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நவரத்னா சிறப்பைப் பெற்ற இந்த இந்திய ஒன்றிய நிறுவனம், கவனக் குறைவாக செயல்பட்டு தொடர்ந்து தமிழர்களின் உயிருடன் விளையாடி வருவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை பிய்த்தெறிந்து, நூற்றுக்கணக்கான கிராமங்களை தின்று செரித்துதான் இன்று என்.எல்.சி எனும் எமன் கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்து மக்களின் வாழ்வியலை சூறையாடிவிட்டு நின்று கொண்டிருக்கிறது. காவேரியில் தண்ணீர் தர மறுத்தபோது, எங்கள் மண்ணிலிருந்து மின்சாரத்தை தர மாட்டோம் என கூறுவதற்கு அஞ்சிய தமிழக ஆட்சியாளர்கள் எம் மக்களின் உயிரை மட்டும் கொத்துக்கொத்தாய் கொதிகலன் வெடித்து கொன்று வீசப்படுவதை வேடிக்கை பார்ப்பது எப்படி நியாயமாகும்?. எங்கள் நிலத்தையும் கொடுத்து உயிரையும் கொடுத்து எங்கள் மக்களை அநாதைகளாக்கவா இந்திய அரசும் தமிழக அரசும் கைகோர்த்து விளையாடுகின்றன?. இறந்த ஒவ்வொரு உயிருக்கும் தமிழக அரசு மூன்று லட்சம் நிவாரணம் அறிவித்ததை வன்மையாக கண்டிக்கிறேன். படித்த பள்ளிக்கூடம், குளித்த குளம், கும்பிட்ட கோயில், குடியிருந்த வீடு, சோறிட்ட வயல் என்று அத்தனையையும் விட்டுக் கொடுத்து உயிரையும் விட்டவனுக்கு இப்படி பிச்சையிடுதல் கூட ஒருவகை வன்முறைதான்.
நிலம் கொடுத்து உயிரையும் தருபவனுக்கு நிரந்தரமில்லாத ஒப்பந்த தொழிலாளர் வேலை. கூட்டம் கூட்டமாக அள்ளிக்கொண்டு வந்த இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லாத வடமாநிலத்தவருக்கு கைநிறைய சம்பளத்தோடு நிரந்தர வேலை மற்றும் சொகுசு வாழ்க்கை. வேறு எங்கேயாவது இந்த கூத்து நடக்குமா? இளிச்சவாயன் தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி நடக்கும். முறையான பராமரிப்பின்றி, வகைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு இன்றி தொடரும் இந்த விபத்துகளும் ஒரு வகையில் பச்சை படுகொலைகள்தான். ஒவ்வொரு முறை விபத்துகள் ஏற்படுகிற போதும் குறிப்பிட்ட தொகையை வீசியெறிந்து அத்துடன் தனது கடமையை முடித்து கொள்கிறதே தவிர மேற்கொண்டு விபத்துகள் ஏற்படாமலிருக்க இரண்டு அரசுகளும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. விலை மதிப்பில்லாத தமிழர் உயிர்களை , வெறும் இயந்திரங்களாக பயன்படுத்தி வரும் என்.எல்.சி நிறுவனம் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மத்திய மாநில அரசுகள் தனித்தனியாக ஐம்பது லட்சம் கொடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு என். எல். சி நிறுவனத்தில நிரந்தர வேலை வழங்க வேண்டும்.
இதற்கு மேலும் சுரங்க விரிவாக்கம் என்று கூறி மீதமுள்ள கடலூர், அரியலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களை என். எல். சி என்கிற எமன் கையகப்படுத்த நினைத்தால், மாணவர்களையும் இளைஞர்களையும், எம் மக்களையும் திரட்டி மண் அதிர மாபெரும் போராட்டத்தை தமிழ்ப் பேரரசு கட்சி முன்னெடுக்கும் என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு உயிரிழந்த எங்கள் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு கண்ணீரோடு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் கெளதமன் தனது அறிககையில் தெரிவித்துள்ளார்.