திவ்யா தமிழக மக்களிடம் நன்கு அறிமுகமான ஊட்டச்சத்து நிபுணர். மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும் நீட் தேர்வை எதிர்த்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அது அப்போது வைரலானது. அண்மையில் கொரோனா ஊரடங்கு காரணமாகப் பெரும் இழப்புகளைச் சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சமீபத்தில் விவசாய துறைக்கு கோரிக்கை வைத்திருந்தார் திவ்யா. இதன்பின்னர் ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தை தொடங்கினார். இந்த ‘மகிழ்மதி இயக்கம்’ அரசியல் கட்சியோ,, சாதி, மதம் சார்ந்த அமைப்போ கிடையாது. வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் பகுதிகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம் என்பதை தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பாஜக சார்பில் திட்டமிடப்பட்ட ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என தெரிவித்தார். அது சர்ச்சையாக மாறியது. இருந்தபோதிலும் இரும்பு பெண்மணியாக இருந்து ரத யாத்திரை தடை கோரிக்கைக்காக மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார் திவ்யா. இந்த நிலையில் திவ்யா அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தவுடன் வருகிற தேர்தலில் தன் மகளுக்கு ஆதரவாக சத்யராஜ் பிரச்சாரம் செய்வார் என்ற தகவல் பரவியது.இது தொடர்பாக திவ்யா கூறியதாவது: “அப்பா என் உயிர் தோழன். என் அரசியல் பாதையில் என்னுடன் கைகோர்த்து நிற்பார். ஆனால் முக்கியமான விஷயம். I am selfmade. Independent person. சொந்த வளர்ச்சிக்காக ஒரு போதும் அப்பாவின் புகழை உபயோகிக்க மாட்டேன்” என தெரிவித்தார் திவ்யா.