ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க வாய்ப்பில்லை

ஏர் இந்தியா விமான நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கை நடப்பு நிதியாண்டுக்குள் முடிய வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருப்பதால், அதற்குள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக விற்பனை செய்து தனியாரிடம் வழங்குவது கடினமான செயல் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு நிறுவனங் களின் பங்குகளை விற்பனை செய்து ரூ.2.10 லட்சம் கோடி நிதி திரட்ட பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பங்குகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் ரூ.1.20 லட்சம் கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டது. மேலும், பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள், எல்ஐசி ஆகியவற்றின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.90 ஆயிரம் கோடி திரட்டவும் அரசு முடிவு செய்தது. ஆனால், இதுவரை மத்திய அரசு ரூ.11 ஆயிரம் கோடி வரை மட்டுமே பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டியது. கடந்த 2018-ம் ஆண்டில் இதேபோன்று ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க அரசு முனைப்பு காட்டியது. அது தோல்வியில் முடிந்தது.

ஆனால், இந்த முறை எடுத்த முயற்சியின் காரணமாக டாடா குழுமம், அமெரிக்காவைச் சேர்ந்த இன்டர் அப்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை விருப்பம் தெரிவித்துக் கடந்த வாரம் கடிதம் எழுதி யுள்ளன. இது தவிர ஏர் இந்தியாவின் 200 ஊழியர்களும் பங்குகளை வாங்கிக்கொள்வதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்கும் தகுதியான நிறுவனங்கள் கடிதம் வழங்க 2021 ஜனவரி 6-ம் தேதி கடைசியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் தகுதியான நிறுவனங்களைத் தேர்வு செய்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிதி தொடர்பான பரிமாற்றங்கள் நடந்து முடிய அடுத்த நிதியாண்டு தேவைப்படும். ஆதலால், இந்த நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனம் தனியார்மயமாக்க சாத்தியம் குறைவு என்று அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். கடந்த 1932-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் 4,400 உள்நாட்டு விமானச் சேவை, 1,800 சர்வதேச சேவையுடன் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் 900 பார்க்கிங் ஸ்லாட்டுகள் உள்ளன. கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து ஏர் இந்தியா நிறுவனம் இழப்பில் செல்கிறது. இதன்பின் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் ஏர் இந்தியா இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.