ஐஎன்எஸ் ‘வீரபாகுவின்’ பொன் விழாவை குறிக்கும் வகையில் சாகச பாய்மர படகு சவாரி பயணம்

ஐஎன்எஸ் ‘வீரபாகுவின்’ பொன் விழாவைக் குறிக்கும் வகையில் இந்தியக் கடற் படையின் பாய்மரப் படகான ‘நீலகண்ட்’ , தனது சாகச சவாரி பயணத்தை மேற் கொண்டுள்ளது. இந்த பாய்மர படகு சாகச சவாரி பயணத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை பொறுப்பு அதிகாரி ரியர் அட்மிரல் புனீத் சத்தா, 2021 மார்ச் 19 அன்று சென்னையில் கொடிய சைத்துத் துவக்கி வைத்தார். கிழக்குக் கடற்படையின் தலைமையகமான விசாகப் பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படையின் நீர்மூழ்கித் தளமாக ஐஎன்எஸ் ‘வீரபாகு’ விளங்குகிறது. இந்த பாய்மர படகு சாகச சவாரி பயணத்தில் கமாண்டர் தீபக் ராஜ் தலைமையில் ஐஎன்எஸ் வீரபாகுவைச் சேர்ந்த 5 அதிகாரிகள் பயணிக்கிறார்கள். பாய்மரப் படகு சவாரி பயணத்தின் முதற்கட்டமாக சென்னை முதல் விசாகப்பட்டினம் வரை இந்த சாகசப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. 366 நாட்டிக்கல் மைல் தொலைவை இந்த முதற்கட்ட பயணம் மேற்கொள்ளும். இந்த சாகசப் பயணம் மூன்று நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளம் பயிற்சியாளர்களின் பாய்மரப் படகு சாகச பயணத்தை இது ஒருங்கிணைக்கும். கடலில் ஏதேனும் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால் அவற்றை எவ்வாறு கையாள்வது, சாகசப் பயணத்தில் மேற்கொள்ளவேண்டிய நுணுக்கங்கள் ஆகியவை குறித்து குழுவினர் நிபுணத்துவம் பெறவும், தங்களது துணிச்சல், ஒழுக்கம் மற்றும் உறுதித்தன்மையை வெளிப்படுத்தவும் இந்த பயணம் உதவிகரமாக இருக்கும்.