ஐஸ் அவுஸ் பகுதியில் 15 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களுடன் குற்றவாளி கைது.

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல்  குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை  கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல் குழுவினர் 10.10.2020 அன்று மாலை அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளர் சரவணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஐஸ் அவுஸ், முனுசாமி நகர், கஜபதி லாலா தெருவிலுள்ள ஒரு வீட்டின் அருகே கண்காணித்தபோது, அங்கு ஒருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை ரகசியமாக விற்பனை செய்து
கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்ட விரோதமாக குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்த அன்சர் அலி, வ/38, த/பெ.நயினா முகமது, எண்.42, கஜபதி லாலா தெரு, முனுசாமி நகர், ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி என்பவரை கைது செய்தனர். அவரது வீட்டிலிருந்து சுமார் 15 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ஸ்வாகத், ரெமோ, கூலிப், விமல் ஆகிய பான்மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.