கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் மற்றும் ‘அம்ருத்’ திட்டங்களின் கீழ் பிகாரில் பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பேயூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பாட்னா, சிவன், மற்றும் சாப்ரா நகரங்களில் புதுப்பிப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்காகன அடல் திட்டம் (அம்ருத்) என நான்கு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இதுதவிர, முங்கர், ஜமல்பூர் ஆகிய இடங்களில் குடிநீர் விநியோக திட்டங்கள், முசாபர்பூரில் கங்கை சுத்தப்படுத்தம் திட்டத்தின் கீழ் ஆற்றுப் படுகை மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டன. கொரோனா நேரத்திலும், பிகாரில் பல வளர்ச்சிப் பணிகள் தடையின்றி நடப்பதாக பிரதமர் கூறினார். பிகாரில் நூற்றுக் கணக்கான கோடி செலவில் சமீபத்தில் தொடங்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களால், உள்கட்டமைப்புகள் மேம்படுவதோடு, பிகார் விவசாயிகளுக்கும் பயனளிக்கும் என பிரதமர் குறிப்பிட்டார்.
பொறியாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் வளர்ச்சிக்குப் பணியாற்றிய பொறியாளர்களை பிரதமர் பாராட்டினார். இந்தியாவின் முன்னோடியாக திகழ்ந்த நவீன சிவில் இன்ஜினியர் சர் எம்.விஸ்வேஷ்வரய்யாவின் நினைவாக இந்த பொறியாளர் தினம் கொண்டாப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு பிகார் மாநிலமும், லட்சக்கணக்கான பொறியாளர்களை வழங்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். வரலாற்று சிறப்புமிக்க நகரங்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியத்தை கொண்ட மாநிலமாக பிகார் உள்ளது என மோடி கூறினார். சுதந்திரத்துக்குப்பின் தொலை நோக்கு தலைவர்களால், பிகார் வழிநடத்தப்பட்டது என்றும், அடிமை கால சிதைவுகளை அகற்ற அவர்கள் தீவிர முயற்சி எடுத்தனர் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதன்பிறகு பிகாரில் ஒரு மோசமான வளர்ச்சி ஏற்பட்டதால், நகர்ப்புற உள்கட்டமைப்பு, கிராமப்புற உள்கட்டமைப்பு ஆகியவை சீரழிந்ததாக பிரதமர் கூறினார். சுயநலம், ஆட்சி நிர்வாகத்தை மிஞ்சும் போதும், ஓட்டு வங்கி அரசியல் தலைதூக்கும்போதும், ஏற்கனவே பின்தங்கியுள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர். குடிநீர் மற்றும் கழிவுநீர் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதியின்றி, பிகார் மக்கள் இந்த கொடுமையை பல ஆண்டுகாலமாக பொறுத்துக் கொண்டனர். அசுத்தமான நீரைக் குடிப்பதால், மக்களுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது என்றும், சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதி சிகிச்சைக்கு செல்வதாகவும் பிரதமர் கூறினார்.
———————————————————————