இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களைக் கைது செய்வதும் அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. ராமேசுவரம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த சிங்களப்படை, தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசித் தாக்கியுள்ளது. மீனவர்களின் வலைகளை அறுத்தும் கடலில் வீசியுள்ளது சிங்களப்படை. அதுமட்டுமின்றி, கரைக்கு திரும்ப முயன்ற 10க்கும் மேற்பட்ட மீனவர்களையும் கைது செய்துள்ளது சிங்களப்படை. தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை முற்றிலும் தடை செய்யும் நோக்கத்துடன், சிங்களப்படை இத்தகைய தாக்குதலை நடத்தியுள்ளது. சுட்டுக் கொல்லப்படுவதும், கைது செய்யப்படுவதும் தமிழக மீனவர்கள் தானே என கைக்கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது இந்திய கடலோரக் காவல்படை. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு திரும்பிய இரு நாட்களில், யாழ்ப்பாணம் கல்லூரியில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழக மீனவர்கள் மீது சிங்களப்படை தாக்குதலை நடத்தியதோடு, கைது செய்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அரசுமுறை பயணம் மேற்கொண்டது, தமிழர்களின் நலனை காக்கவா அல்லது முற்றிலும் தமிழர்களை அழித்து ஒழிக்கவா என்ற சந்தேகம் எழுகிறது. அதே நேரத்தில் தமிழகம் என்பது இந்தியாவிற்குள் இருக்கிறதா என்ற சந்தேகமும் எழுகிறது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 24 மணி நேரத்திற்கு மேலாகிவிட்ட நிலையில், இந்திய அரசு இதுவரை வாய் திறக்காமல், மௌனம் காத்து வருவது வன்மையாக கண்டிக்கதக்கது. எனவே, சிங்களப் படையால் கைது செய்யப்பட்ட 10க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உள்பட இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்