சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த 2020ம் ஆண்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில், போதை தடுப்புக்கான நடவடிக்கையின் காரணமாக சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தல், வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 533 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 938 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 3,079 கிலோ கஞ்சா, 93 இருசக்கர வாகனங்கள், 37 மூன்று சக்கர வாகனங்கள், 11 இலகுரக வாகனங்கள் மற்றும் 3 கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் கடத்தல், வைத்திருந்தது மற்றும் விற்றது தொடர்பாக 2,155 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,384 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 23,868 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா வழக்கில் கைதான 83 குற்றவாளிகள் மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் வழக்கில் கைதான 1 குற்றவாளி என மொத்தம் 84 குற்றவாளிகள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு போதைப் பொருளுக்கெதிரான நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு, போதை பொருள் நடமாட்டத்தை அறவே குறைத்து, இளைஞர்கள் மற்றும் மாணவர்களை போதைக்கு அடிமையாகமால் சமூகத்தை பாதுகாத்த சென்னை பெருநகர காவல்துறையை பாராட்டும் விதமாக, ரேடியோ சிட்டி பண்பலைவரிசையின் (FM 91.1 MHz) (Regional Programming Director) திரு.பிரபு, மார்க்கெட்டிங் DGM திரு.பிரவீன், நிகழ்ச்சி தயாரிப்பாளர் (Programme Producer) .பத்மா மற்றும் குழுவினர் இன்று (19.01.2021) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வாலை நேரில் சந்தித்து, சென்னை பெருநகர காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பான பணியையும், கொரோனா காலத்தின்போதும் சிறப்பாக பணிபுரிந்தமைக்காகவும் பாராட்டி சிட்டிசன் அவார்டு என்ற சிறப்பு கேடயம் வழங்கினர்.