கரிசல் இலக்கிய முன்னோடி கி.ராஜநாராயணனுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அஞ்சலி

தமிழ் இலக்கிய உலகில் கரிசல் இலக்கியம் என்கிற வகைமையின் பிதாமகர் தோழர் கி.ராஜநாராயணன் நேற்றிரவு 11 மணிக்கு புதுச்சேரியில் காலமானார் என்கிற செய்தி அறிந்து ஆழ்ந்த துயரடைகின்றோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பாக அவருக்கு செவ்வஞ்சலியை செலுத்து கின்றோம். தூத்துக்குடி மாவட்டம் இடைசெவல் கிராமத்தில் 1923இல் பிறந்த அவர் பள்ளிப்படிப்பை ஐந்தாம் வகுபுக்குமேல் தொடர வாய்ப்பின்றிப் போனது. இளமைக்காலத்தில் 1940களில் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகத் தீவிரமாகச் செயல்பட்டவர். தோழர் ஜீவானந்தம், ஆர்.நல்லக்கண்ணு உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களோடு நெருக்கமாகப் பழகியவர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்சி தடை செய்யப்பட்ட காலத்திலேயே இடைசெவல் கிராமத்தில் மே தினத்தன்று செங்கொடி ஏற்றியவர். போராட்டங்கள் பலவற்றில் பங்கேற்றுள்ளார். சிறை சென்றுள்ளார். அவரது சிறை அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது அவ்வப்போது விமர்சனங்கள் வைத்தாலும் இறுதிவரை நட்பும், தோழமையும் கொண்டிருந்தார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது கோவில்பட்டித் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசனுக்கு வாக்குக்கேட்டு கரிசல் எழுத்தாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் அவருடைய கையெழுத்தே முதல் கையெழுத்தாக இருந்ததை நாம் மறக்க முடியாது. ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு வந்து குடியேறிய மக்களின் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்ட கோபல்ல கிராமம் நாவல் முற்றிலும் வாய்மொழி வழக்காறுகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. பேச்சு வழக்கை நவீன இலக்கியத்தின் மொழியாக ஆக்கிய முன்னோடி அவர். அந்நாவலின் தொடர்ச்சியாக அவர் எழுதிய ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்கு 1991 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து இலக்கியச்சிந்தனை விருது, கனடா இலக்கியத்தோட்ட விருது, தமிழக அரசின் விருது உள்ளிட்ட பல விருதுகள் அவரைத் தேடி வந்தன. கரிசல் வட்டார வழக்குச் சொல்லகராதி ஒன்றை அவர் கடுமையான உழைப்பைச் செலுத்திக் கொண்டுவந்தார். ஒரு அரசாங்கம் அல்லது பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய இப்பணியை அவர் தனியாகச் செய்து முடித்தது மகத்தான சாதனை ஆகும். எளிய உழைப்பாளி மக்களின் பாடுகளையே அவருடைய எல்லாப் படைப்புகளும் பேசின. வாய்மொழிக் கதைகளைத் தொகுப்பது,வட்டார வழக்கு அகராதிகளைக் கொண்டுவர பிற படைப்பாளிகளைத் தூண்டுவது,பேச்சு மொழியை உயர்த்திப்பிடிப்பது என்கிற அவரது செயல்பாடுகள் எல்லாமே உழைக்கும் மக்களின் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் பண்பாட்டு அரசியலாகவே நாம் பார்க்க வேண்டும். அவருடைய கரிசல் காட்டுக் கடிதாசிகள் மிகவும் புகழ்பெற்றவை. ஆழ்ந்த இசை ஞானம் கொண்ட அவர் இசை மேதை விளாத்திகுளம் சாமிகள், நாதஸ்வரச் சக்கரவர்த்தி, காருகுறிச்சி அருணாசலம் ஆகியோரோடு நெருக்கமான நட்புக்கொண்டிருந்தார். தொடர்ந்து எழுத்துலகில் இயங்கிக்கொண்டிருந்த அவர் இறப்பதற்கு முன்பாகக்கூட “அண்டரண்டாப்பட்சி” என்கிற நெடுங்கதையை எழுதியிருக்கிறார். அவருடைய மறைவு இலக்கிய உலகினருக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவருடைய பிரிவால் துயருற்றிருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், இலக்கிய உலகினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அனுதாபத்தையும், ஆறுதiயும் தெரிவித்துக் கொள்கிறது.

(கே. பாலகிருஷ்ணன்)
மாநிலச் செயலாளர்