கரூரில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரூர் மாவட்ட நிருவாகம் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் இணைந்து அமைத்துள்ள ஆக்சிஜன் வசதிகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தினை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.  தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கரூரில் உள்ள TNPL -ல் உள்ள சமுதாயக் கூடத்தில், 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை  அமைத்துள்ளது.  அவற்றில் 152 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகள் கொண்டவை ஆகும். இந்த சிகிச்சை மையத்திற்கு மின்சார வசதி, குடிநீர் வசதி, மருத்துவப் பணியாளர்களுக்கான அறைகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.   இவை தவிர, ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி இம்மருத்துவமனைக்குக் கிடைத்திட, சுமார் 1 கோடி ரூபாய் செலவில்,
உபகரணங்கள் இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.  மேலும், அருகிலுள்ள கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜனை சிலிண்டர்களில் இங்கு நிரப்பி வழங்கவும்  எற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிகழ்ச்சியில், கரூரிலிருந்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் செ. ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஆர். இளங்கோ, திரு. இரா. மாணிக்கம்,  திருமதி க. சிவகாம சுந்தரி, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பிரசாந்த் மு. வடநேரே, இ.ஆ.ப., தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் செயல் இயக்குநர் திரு.எஸ்.வி.ஆர். கிருஷ்ணன் ஆகியோரும், தலைமைச் செயலகத்திலிருந்து தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், இ.ஆ.ப., தொழில் துறை சிறப்புச் செயலாளர் திரு. அருண் ராய், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.