கலைஞர் சூர்யா வேண்டுகோளை ஏற்போம் – இரா.முத்தரசன்

மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பிடிவாதமாக திணித்து வரும் ‘நீட்’ தேர்வு காரணமாக தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அறிவார்ந்த, திறன்மிக்க மாணவர்களின் உயிர்களை பறிக்கும் கொடூரம் அரியலூர் மாணவி அனிதா தொடங்கி திருச்செங்கோடு மாணவர் மோதிலால் எனத் தொடர்கிறது. ஒரே நாளில் மூன்று குழந்தைகளை பலி கொடுத்த தமிழகத்தின் கதறலை கலைஞர் சூர்யாவின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நியாய உணர்வை புரிந்து கொள்ளும் சக்தியற்ற ‘மேதாவிகள்’ அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுப் போட்டு உசுப்பேற்றுகிறார்கள். தற்கொலைக் குறிப்பில் உள்ள எழுத்துப் பிழைகளை எண்ணிப் பார்க்கும் வன்மம் குறித்து பொதுத் தளத்தில் விவாதம் இல்லை. சமூகத்தின் எந்தவொரு நிகழ்ச்சியின் மீதும் நியாயமான விமர்சனம் செய்யும் உரிமை ஆரோக்கியமான ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதனை பாதுகாப்பதும், முன்னெடுப்பதும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வீரியமளிக்கும், தனி நபர்களும், அமைப்புகளும் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை அரசியல் அமைப்பு சட்டம் அடிப்படை உரிமையாக என உறுதி செய்திருக்கிறது. இதனை உயர் நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் வழங்கியுள்ள தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளன. இவைகளையெல்லாம் உள்வாங்காமல் கலைஞர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பாக கருத வேண்டும் என்று பேசுவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. சூர்யாவின் வேண்டுகோளை ஏற்று தமிழ் சமூகம் ஒன்றிணைந்து குரல் எழுப்ப முன் வரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்