திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரில் உள்ள திரு இருதய தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறைத் தோட்டம் மணிமூர்த்தீஸ்வரத்தில் இருக்கிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட கல்லறைகள் இருக்கின்றன. இந்தக் கல்லறைத் தோட்டத்தில் ‘இந்து மக்கள் கட்சி’ என்ற பெயரில் செயல்படும் வன்முறைக் கும்பல் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து கல்லறைகளை சேதப்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஸ்த்துவ சிறுபான்மை மக்களின் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் இந்து மக்களை மதவெறியூட்டி தேர்தல் ஆதாயம் தேடும் அரசியல் சதியின் வெளிப்பாடாகவே இந்தக் குற்றச் செயலை கருத வேண்டும். இந்துத்துவ அரசியல் கருத்தியலை மனித நேயம் கொண்டோர் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்த்து முறியடிக்க வேண்டும். மதச்சார்பற்ற பண்புகளை அழித்தொழிக்கும் வன்செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக் கண்டிக்கிறது. மணிமூர்த்தீஸ்வரம் கல்லறையில் வன்முறை செய்த குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்