காந்தியின் அகிம்சை வீரத்தின் அடையாளம்

அக்.2 இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஆகும். காந்தி ஜெயந்தி என்ற பெயரில் இந்தியா முழுவதும் காந்தியின் நல் உபதேங்களை பறைசாட்டப்படுகிறது. இன்றைய இளைஞர்களுக்கு காந்தியை அறிமுகப்படுத்த வேண்டியது கட்டாயமாகும். எந்தக் காந்தியை அறிமுகப்படுத்துவது என்றால் எதற்கும் அஞ்சாத, அநீதியைக் கண்டு பொங்கி எழுந்த, நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொண்ட காந்தியைத்தான் அறிமுகம் செய்ய வேண்டும். காந்தியைப்போல போராட்ட வீரரை நாம் பார்க்க முடியாது. சிலர் சொல்வது போல அவருடைய அகிம்சை என்பது கோழைத்தனம் அல்ல. அது வீரத்தின் அடையாளம் ஆகும். போராட்டத்துக்கு எண்ணிக்கை முக்கியம் அல்ல. எத்தனை பேர் அர்ப்பணிப்புடன் அந்தப் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். தென்னாப்பிரிக்காவில் போராட்டத்துக்கு இந்தியாவில் இருந்து கோகலேவை அழைத்த காந்தி போராட்டத்தில் 64 பேர் கலந்து கொள்வார்கள்; நிச்சயம் 18 பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்து இருந்தார். கொள்கையில் உறுதியுடன் இருத்தல் என்பதைத்தான் இன்றைய இளைஞர்கள் காந்தியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். காந்தியை உணர்வுப்பூர்வமாக அறிந்துகொள்ள வேண்டும் என்று புதுதில்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குனர்
திரு. அ.அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரியில் உள்ள மக்கள் தொடர்பு கள அலுவலகமும் சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி மையமும் இணைந்து இன்று முற்பகல் நடத்திய மகாத்மா காந்தி 151ஆவது பிறந்த நாள்- இன்றைய இளைஞர்களுக்கு காந்தி என்ற காணொலிக் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசியபோது திரு.அண்ணாமலை இவ்வாறு தெரிவித்தார். கோவிட் பெருந்தொற்றானது இன்று அடுத்தவர் மீதான அவநம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதுவரையான வளர்ச்சி மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நகரங்களும் நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகளும் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. கிராமங்கள் அதிகப் பாதிப்பில்லாமல் தப்பி இருக்கின்றன. கிராமங்களில் சூழலும் பாதுகாப்பானதாக இருக்கின்றது. இந்தப் பின்னணியில் காந்தியின் கிராம சுயராஜ்ஜியம் என்ற கருத்துக்களை நாம் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அண்ணாமலை மேலும் கேட்டுக் கொண்டார். சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பாவண்ணன் ”இன்றைய இளைஞர்களுக்கு காந்தி” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். பெரிய பெரிய போராட்டங்களை முன்னெடுத்தவர் நாட்டு மக்களை போராட்டங்களில் ஈடுபடுத்தியவர்; தேசத்துக்கே தந்தை என்று காந்தியை இன்றைய இளைஞர்கள் தூரத்திலேயே நிறுத்தி வைத்து விடுகிறார்கள்.

காந்தியை நம் அருகில் வைத்துப் பார்க்க வேண்டும். நமக்குள் இருக்கின்ற காந்தியைப் பார்க்கப் பழக வேண்டும். ஏழைகளிடம் அன்பு காட்டுகின்றவர்கள் அனைவருமே காந்திதான். அன்பு காட்டப் பழகினால் தானாகவே உதவிகள் செய்யப் பழகி விடுவோம். காந்தியைப் புரிந்து கொள்ள புத்தகங்களைப் படிக்கத் தேவையில்லை. அன்பு காட்டவும் உதவி செய்யவும் தொடங்கினாலே அவர் காந்தியாகவே மாறிவிடுவார். எனவே இன்றைய இளைஞர்கள் அன்பு, பரிவு,
கருணை மற்றும் கனிவு ஆகிய குணங்களை மேற்கொண்டு பிறருக்கு உதவிகள் செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். காந்தியை அரசியல் களத்துக்குள் மட்டுமே அடைத்துவிட முடியாது. ஒட்டுமொத்த மனிதகுல விடுதலைக்கும் காந்திதான் அடையாளமாகத் திகழ்கின்றார். உப்புச் சத்தியாகிரகத்தின் போது ஒரு பிடி உப்பை கையில் அள்ளி இது உப்பில்லை, இது தேசத்தின் கௌரவம் என்று உலகைத் திரும்பிப் பார்க்கச் செய்தவர் காந்தி. காந்தியிடம் இருந்து இன்றைய இளைஞர்கள் திட்டமிடல், நேர மேலாண்மை, விதிகளைக் கடைபிடித்தல் போன்ற அம்சங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாவண்ணன் கேட்டுக் கொண்டார்.

அறிமுகவுரை ஆற்றிய சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இணைஇயக்குனர் திரு ஜெ.காமராஜ் என் வாழ்வே கொள்கை என் வாழ்வே மக்களுக்கான செய்தி என்று தம் வாழ்வை வெளிப்படையானதாக அமைத்துக் கொண்டவர் மகாத்மாகாந்தி ஆவார். அவரது வாழ்க்கை வரலாறே இன்றைய இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக அமையும். காந்தி நம்மிடம் இருந்து எந்தெந்த விஷயங்களில் மாறுபடுகிறார் என்பதைத் தெரிந்து கொள்வதே காந்தியைப் புரிந்து கொள்வதற்கான முதல் படி என்று தெரிவித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி மைய இயக்குனர் டாக்டர் பி.பாலமுருகன், சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் டாக்டர் என்.சாந்தி, அந்தக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் டாக்டர்  ஸ்.டார்லிங் குயின் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி இயக்குனர் முனைவர் தி.சிவக்குமார் வரவேற்புரை ஆற்றியதோடு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். களவிளம்பர உதவியாளர் மு.தியாகராஜன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தேசிய காந்தி அருங்காட்சியகம் தயாரித்திருந்த காந்தி குறித்த 20 நிமிட ஆவணப்படம் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியில் 125 மாணவர்கள் மற்றும் 50 மகளிர்கள் கலந்துகொண்டனர்.