இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள், தனிநபர்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடிக்கும் (1,030 கோடி டாலர்கள்) அதிகமாக வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வரி மோசடி குறித்தும், அதனால் நாடுகளுக்கு ஏற்படும் இழப்புக்கு குறித்து “தி ஸ்டேட் ஆப் டேக்ஸ் ஜஸ்டிஸ்” என்ற அமைப்பு ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் நடக்கும் வரி ஏய்ப்பின் அளவு, அந்த வரி ஏய்ப்பை கையாள, தடுக்க அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்த இந்த அறிக்கை விளக்குகிறது. இதில் உலக அளவில் நாடுகளில் ஆண்டுதோறும் 42,700 கோடி டாலர்கள்(ரூ.31.66 லட்சம் கோடி) அளவுக்கு சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள், தனிநபர்கள் மூலம் வரி ஏய்ப்பு அல்லது மோசடி நடக்கிறது. இதில் வரி ஏய்ப்பின் மூலம் கிடைக்கும் தொகை என்பது உலகளவில் 3.40 கோடி செவிலியர்களுக்கு ஓர் ஆண்டுக்கு ஊதியம் தர முடியும் அளவுக்கு சமமானதாகும்.
இந்தியாவைப் பொருத்தவரை, ஆண்டுதோறும் தனிநபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் 1,030 கோடி டாலர்கள்(ரூ.75 ஆயிரம் கோடி) வரி ஏய்ப்பு நடக்கிறது. அதாவது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 0.41 சதவீதம் வரி ஏய்ப்பு நடக்கிறது. இதில் இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும் 1,000 கோடி டாலர்கள் அளவுக்கு ஆண்டு தோறும் வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபடுகின்றன, தனிநபர்கள் 20 கோடி டாலர்கள் அளவுக்கு வரிஏய்ப்பில் ஈடுபடுகிறார்கள். இந்த வரி ஏய்ப்பு சமூகரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதாவது, இந்திய அரசின் சுகாதாரத்துக்கு ஒதுக்கும் தொகையில் 44.70 சதவீதத்தை இந்த வரி ஏய்ப்பிலிருந்து எடுக்க முடியும். கல்விக்குச் செலவிடும் தொகையில் 10.68 சதவீதத்தை இதிலிருந்து மீட்க முடியும். இந்தியாவில் 42.30 லட்சம் செவிலியர்களுக்கு ஆண்டு ஊதியம் வழங்கும் அளவுக்கு சமமானதாகும். சட்டவிரோதமாக முதலீடுகள் நாட்டுக்குள் வருவதில் இந்தியாவில் பெரும் பங்கு உள்ளது. குறிப்பாக மொரிஷியஸ், சிங்கப்பூர், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து அந்நிய நேரடி முதலீடு சட்டத்தின் உள்ள ஓட்டைகள் மூலம் முதலீடுகள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.