சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் வழிகாட்டுதலின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. பணியின்போது இறந்த 42 காவல் ஆளிநர்களின் வாரிசுகளுக்கு கல்லூரி மற்றும் பள்ளி படிப்புக்கான கல்வி உதவி தொகையினை 22.10.2020 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இறந்த காவலர் குடும்பத்தினரிடம் வழங்கினார். இதன் தொடர்ச்சியாக கடந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டு பணியின்போது, புற்றுநோய் மற்றும் இதர உடல்நலக் குறைவால் இறந்த தலைமைக் காவலர்கள் சண்முகம், சிவகுமார், பிரபாகரன், முதல்நிலைக் காவலர்கள் எழிலரசி மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோரின் குடும்பம் தற்போது வறுமையால் வாடுவதும், தலைமைக் காவலர் சண்முகத்தின் மனைவியும் இறந்துவிட்ட நிலையில், அவரது 2 குழந்தைகளும் தாய், தந்தையர் அற்று பாட்டி வீட்டில் வசித்து வருவதும் அறிந்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முயற்சியில், ‘‘கௌசல்யா லட்சுமிபதி அறக்கட்டளை‘‘ என்ற தொண்டு நிறுவனத்தினர் மிக நலிந்த மேற்படி 5 காவலர் குடும்பத்திற்கு கல்வி உதவித் தொகை வழங்க முன்வந்தனர்.
அதன்பேரில், 06.3.2021 அன்று காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், மேற்படி அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் ஸ்பிரிங்பீல் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்களான திலீப்குமார் மற்றும் ரஞ்சனி திலீப்குமார் முன்னிலையில் மேற்படி மிக நலிந்த 5 காவல் ஆளிநர்களின் குடும்பத்தில் படித்து வரும் 10 குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மொத்தம் ரூ.1,92,900/-ஐ வழங்கினார். மேற்படி கௌசல்யா லட்சுமிபதி அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தினர் 2017ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளாக 12 இறந்த காவலர் குடும்பத்தினருக்கு இதுவரை ரூ.4,65,645/- கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளனர்.