சென்னை, ஓட்டேரி, சந்தியப்பன் 5வது தெருவில் வசித்து வரும் பொன்னம்மாள், வ/37, க/பெ.ராஜமாணிக்கம் என்பவர் அவரது வாய் பேச அவரது 5 வயது குழந்தை பழனி என்பவருடன் 12.3.2021 அன்று காலை சுமார் 09.00 மணியளவில், ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டை, சந்தைக்கடை மார்க்கெட்டிற்கு சென்றார். அப்பொழுது கூட்ட நெரிசலில் குழந்தை பழனி காணாமல் போனதால், பல இடங்களில் தேடியும் குழந்தை பழனி கிடைக்காத நிலையில், பொன்னம்மாள் உடனே G-5 தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். G-5 தலைமைச் செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், துரிதமாக செயல்பட்டு காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்தும், அப்பகுதியிலுள்ள காவல் குழுவினருக்கு வாட்சப் குழுவில் தகவல் தெரிவித்தும், வாகனங்களில் சென்று ஆட்டோ நிறுத்தம், பேருந்து நிறுத்தம் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை செய்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் விரைந்து சென்று ஓட்டேரி, வரதம்மாள் கார்டன் 2வது தெருவிலுள்ள மைதானம் அருகில் குழந்தை பழனியை பத்திரமாக மீட்டனர். பின்னர் காவல் நிலையத்தில் குழந்தைக்கு உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி, பெற்றோருக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி, குழந்தை பழனியை பெற்றோர் வசம் பத்திரிமாக ஒப்படைத்தனர். காணாமல் போன குழந்தையை தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் பத்திரிமாக மீட்ட G-5 தலைமைச் செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.